Tuesday, 17 December 2013

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் .
மிதமான மாலை ;
இதமான காற்று ,
மெலிதான சாரல் :
சிந்திய தேனை சுற்றி
மொய்த்திடும் ஈக்களைப் போல
ஷேர் ஆட்டோக்கள் சுற்றிவர ,
தொகுதிமேம்பாட்டு நிதியின் பிச்சை கேட்டு
அரைநிர்வாணமாய் நிற்கும் குண்டுகுழி சாலையில்
பல்லவன் விசிறும் சேற்றிற்கு தப்பித்து
அடைக்கலம் நாடி ஓடினோர்  மத்தியில் ,

ஆனந்தக் களிப்பில் ஆடும் பதுமையாய் ,
ஆர்ப்பரித்தாள் கண்களை !
சத் .. சத் .. என சொட்டும் மழை நீரில்
‘ ஜல் ஜல் ’ தாளமிடும் கால் ஜதிக்கு ,
அபிநயம் காட்டும் V-கட் கூந்தல் ;
பூரிப்பில் சுருங்கி விரிந்த முக வரிகள்
பசுமையும் செழுமையும் சேர்த்தொழுகிய தேகம்
பார்வையில் தணியாத தாகம் !

அவளை  ரசித்துக் கொண்டே
காற்றில் பறந்த மேகங்கள்
ஒன்றோடொன்று மோதி முழங்கின
 பேரிடியாய் அவள் வரவை

பார்வையில் பட்டவுடன் ஓடி வந்தாள் ;
ஆசையோடு தன் அருகே வரவழைத்தாள் ,
குளிர் தந்த குதூகலமோ :
என்னை கையோடு  அணைத்தாள் ...
என் வாயோடு இதழ் பதித்தாள் ...
அவள் எச்சில் ஈரத்தில் – என்
வெப்பம் ஆவியாகிப் போனதே ,
என்னை ரசித்து ரசித்து  
 அவள் குளிர் காய்கிறாளோ !

என்னை நனைய விட்டு
கொட்டும் மழையின் ஒரு
சொட்டை பருக வைத்தாள்
ஆ ! அலாதி மழையின் சுவை !!

சட்டெனப் பிரிந்தாள் காசை திணித்து
என் மன/ணம் திருடிக் கொண்டு .
மறுமுறை ஒன்றில்லாவிட்டாலும் 
அவள் சுவை மறவேன் நான்
பிறிதொரு மழையில் சந்திக்கும் வரை !

இப்படிக்கு,
ஒரு காபிக் குவளை,
சாலையோர கடை.










Wednesday, 13 November 2013

ஏன் ?



அவளிடம் இன்னும் சொல்லவில்லை . . .
யாருமற்ற நடை வெளியில்,
நிழல் துணை மட்டும் கொண்ட,
தூக்கமிலா தூணுக்கு உந்து கொடுத்து
கயவரைப் போல் இரா முழித்து,
வெளிச்சமில்லா வெளியை  வெறித்துக் கொண்டு
காது மடல் வலிப்பது தெரியாமல்
“ம், ம், ...., ம்: அப்புறம்” சொல்லி
அவ்வப்போழ்து வெட்கப் புன்னகை உதிர்த்து
விடிவது தெரியாமல் வறுக்க,


“இன்று அவளுடன் ஏன் சிரித்தாய் ?”
“அவள் ஏன் உன்னையேஏஏஏஏஏஏஏ பார்க்கிறாள் ?”
“இனி ‘கா’ உன் பேச்சு”
என் சொல்லி எனை ‘திக்’கிட ,
‘நீ என்னுடன் மட்டும் தான் ,,,’
‘நான் சொல்றத கேக்க போறியா இல்லையா ?’
என்றெல்லாம் உரிமையாய் அதட்டிட ,
ஊடல்களால் குளிர் காய்ந்து
உவமை ஓவியமாய் வாழ்ந்திட ;


புருவத்தின் வளைவை யொட்டி
முன் தொங்கிய முடியை
என் கைச்சிறகால் கோதி
காதிற்கு பின்னே கடத்தி
முகத்தை முன் இழுத்து
மூச்சுக் காற்றால் முகம் நுகர்ந்து
நெற்றிக்கு நடுவே ஒத்தடமாய் முத்தமிட ,
வெட்கம் மூடிய உன் விழிகளை
திட நீர் ததும்பி எழுப்ப
உள் மணி உற்சாக ஓசை அடித்து
கலர் கனவுகள் கண் முன்னே விரிய ,


காதல் என்னும் காவியத்தை
அவளிடம் மட்டும் சொல்லாமல்
கற்பனைகளில் மட்டும் வரைந்து கொண்டிருக்கிறேனே !
ஏன் ?
ஏன் ?
ஏன் ?

எனக்கென்ற “அவள்” இன்னும் வாய்க்கவே இல்லை.


ஏன் ?




Thursday, 1 August 2013

முகமூடி




வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நாம் சித்தரிக்கும் சுவடுகள். நமது சுவடுகளில், அறிந்தோ அறியாமலோ நம்மை சுற்றி ஒரு எல்லைக் கோடு உருவாகி விடுகிறது. மனதிற்குள் ஒரு மதில் சுவர். சில, நாம் பாதுகாப்பு என்று நினைத்து உருவாக்கிக் கொண்டவை; பல தானாக நம்மை சுற்றிக் கொண்டவை.

இந்த திரை கர்வம், கெளரவம், தன்மானம், தற்காப்பு போன்ற எதுவாகவும் இருக்கலாம். என்ன தான் இந்த திரை நமது சுயத்தை மறைப்பதற்காக தோன்றி இருந்தாலும், உள்ளுணர்வு முழுப் பூசணி போல் வெளிப்பட்டு விடும்.


‘நான் டாக்டர் ஆக வேண்டும்’, ‘நான் சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்’ என்று குறிக்கோள்கள் இருந்தாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஈடுபாடு காட்டும் மாணவர்களை நீங்கள் காணலாம்.

அமைதி தான் நாடும் தெய்வம் என்றாலும், புரியாத மொழியில் சிலைகளுக்கு செய்யும் அர்ச்சனை சிறு ஆறுதல் தரும்.

சோதிடத்தை எள்ளி நகையாடினாலும், ஒரு புது வீடு வாங்கும் போது வாசல் கிழக்கு முகமாக வேண்டும்.

விட்டுக் கொடுத்து போனாலும், சண்டையிட்டாவது நமக்கே உரியதாக்கிக் கொண்டிருந்தால் எவ்வளவு நல்லா இருந்திருக்கும் என்று குற்ற உணர்வு குறுகுறுக்கும்.


நமது குட்டு வெளிப்பட்டு விட்டால், சுற்றி இருக்கும் நட்புகள் நம்மை ஒதுக்கி விடக் கூடும். தனிமையில் தள்ளி விடக் கூடும். இந்த பயத்தினாலேயே திரையை கழற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

தனிமை தான் ஒருவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை. கொலை கொள்ளை குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவது தனிமை அவர்களை சிந்திக்க வைக்கும், சீர்திருத்தும் என்ற நோக்கத்தில் தானோ என்னவோ.

Shawshank Redemption படத்தில் வரும் கதாநாயகன், சிறைக்குள்ளும் தன்னை ஒரு வங்கி ஊழியனாகவே நினைத்து வாழ்கிறான். வாழ முயற்சிக்கிறான். காவலாளிகள் செய்த பிழை அவனை தப்பிக்க விட்டது இல்லை. அவனை வங்கி ஊழியன் போல் வேலை செய்ய வைத்தது தான்.

வேலி பயிரின் இலைகளையும், கிளைகளையும் எல்லையைத் தாண்டாமல் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து விடக் கூடும். ஆனால் வேர் அதன் தாகம் தணியும் வரை ஆழமாக, அதி வேகமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கும்.



சரித்திரத்தில் நாம் சுயத்தை வெட்ட வெளிச்சமாகவும் பதிவு செய்யலாம். அல்லது நம்மை போலியாகக் காட்டும் ஒரு சரித்திரம் வரைந்து விடவும் முடியும்: 23 ஆம் புலிகேசி வடிவேலுவை போல்.

சில இடங்களில் வெளிப்பூச்சிட்ட முகம் தான் மிளிரும்.


Monday, 13 May 2013

அன்று மதம், இன்று மொழி


அன்று மதம் மட்டும் …  இன்று மொழியும் ! (Topic has been updated due to circumstances.)

அவனைத் தொடாதே, அவன் ***** ”, என்ற காலம் போய் விட்டது என்று ஒருவாறு கருதிக் கொள்ளலாம். என் பாட்டி வீட்டிற்கு சிறு வயதில் செல்லும் போதெல்லாம் வீட்டு வேலைக்கு வரும் வெள்ளையம்மாவுக்கு என்று தனியாக ஒரு டம்ப்ளர், தட்டு எல்லாம் இருக்கும். அவள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்தவுடன் சந்தில் உட்கார வைத்து சாப்பாடு போட்டு கையில் கொடுக்க வேண்டுமேஎன்று ஒரு சில பத்து ரூபாய் தாள்களை திணித்து அனுப்புவார்கள்.

இன்று பட்டணத்தில், (எங்கள் ஊரில், வீட்டுப் பெண்களே வேலை செய்து கொள்கிறார்கள்) வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் சேரும்போதே, மாதம் இரண்டாயிரத்து ஐநூறு, தீபாவளி பொங்கல் போனஸ், மாதம் 3 நாட்கள் லீவு போட்டுக் கொள்ள அனுமதி இன்னும் இன்னும் என நீள்கிறது கண்டிஷன்ஸ் லிஸ்ட்.

பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என நிறுவனங்களிலும் சேர்க்கையின் போது மட்டும் தான் சாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுகின்றன. சில கிறுக்கர்கள் இருந்தாலும், ‘மத வெறி மடையர்கள், மாணவர்களுக்கிடையே இல்லை’, என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

ஆனால் இன்று வேறு ஒரு பாகுபாடு .

மொழி வேறுபாடு.

தென்னிந்தியக் குடிமகன் ஒருவன், இந்தி தெரியாமல் வடக்கிற்கு சென்று திரும்புவதற்குள் படும் பாடு சொல்லி மாளாது. என்ன மொழி பேசினாலும், அவன்மதராசி?” என்று ஏளனமாகப் பார்க்கப்படுவது, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் துன்பத்தைக் காட்டிலும் கொடியது. வேண்டுமென்றே, சிலர்  சண்டைக்கிழுத்து குளிர் காய்வார்கள்.

அவ்வளவு ஏன், ஒரு அலுவலகத்தில் புதிதாக சேரும் மலையாளம் (அ)தெலுங்கு பேசும் ஊழியரிடம் ஒரு தமிழன் பழகுவதற்கு ஆகும் காலம் – மாதக் கணக்கில் ஆகின்றது என்பது பல இடங்களில் உண்மை.

நமது ஆட்களும் சளைத்தவர்கள் அல்ல. அவன் நம்மவன் இல்லை என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருக்கும் போலும். இல்லை, ‘தனக்கு தெரியாத மொழியில் அவன் பேசுகிறான்’, என்ற காழ்ப்புணர்ச்சியாய் இருக்கலாம்.

சென்ற வருடம், செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. விடுதி உணவகத்தில், என்ன உணவு சமைக்க வேண்டும் என்ற போட்டியில், வட-இந்திய மாணவர்களுக்கு சாதகமாக, வாரத்திற்கு நான்கு நாட்கள் சப்பாத்தி போடும் சமையல் காரருடன் சண்டை வளர்த்த மாணவர் கூட்டத்தை, சமாதானம் செய்தனர் விடுதிக் காப்பாளர்கள்.

மொழிச் சண்டை ஒரு சமூகத்தை அழிக்கும் அளவிற்கு வளர விட்டது மானுட முட்டாள்தனத்தின் உச்சம்.

தமது மொழி பேசுவோரிடம் ஒரு மாதிரி மனோபாவத்துடனும், தமிழர்களிடம் மிடுக்கான தோரணையும் காட்டும் பலரை நம்மிடையே காண முடிகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபாடு வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. வேற்று மொழி தான், அடிமைத்தனத்துக்கு அடித்தளமாக இருந்தது. ஆனால், நமது மொழி சார்ந்தவர் அல்லாதோரை ஒரு சிற்றுயிராகக் கருதாமல், மனிதனாக மதித்தால் மட்டும் போதும்.

‘காட்சியகத்தில் காணும் அரிய வகை உயிரிகள் அல்ல அவர்கள்’, என்ற கண்ணோட்டம் பிறக்க வேண்டும்.

மாற்றங்களை ஏற்கும் மனப்பாங்கு வேண்டும்.

Those Ticking Moments




Place : Erode Bus stand, Tamil Nadu (India).
20-01-2013, 16 49 hours

I was exhausted, waiting for a bus. Sitting throughout the travel was the crucial cause (though mind had it to grab a window seat at the centre of the bus).

Pongal holidays were over and it's time to return to the routine. A week back the headlines read that special buses were arranged to reduce the rush. No one cares about the return journeys I suppose.

The conductor wouldn't let me in till it was 4.55. Soon, around 50 people had rushed gathering in front of each door of the bus. Sadly, I was the one at the front and had to suffer for everyone's loading their luggage on me forward to gain entry.

The stench out of pay toilets was irritating. The spit pan-saliva concentrate from the nearby bus window traveled a parabolic trajectory to land just away from my white coloured pants. It reminded me of the "mukesh" of awareness trailer in theaters. 

Vendors switched buses selling pens that could write in 4 different colours, burfis, and hand kerchiefs. The sambhar packet fallen off from someone carrying parcel meals, was smashed hard by a walker and was inviting buzzing houseflies.

One  by one, people started to lament their urge to get in. Oh, we still have 6 hard minutes for that. So they talked it out.




Mr.X had been travelling in train the week before in the lavatory of unreserved compartment in the train from MAS to ED. And added he had 5 companies all noses covered with their kerchiefs ! 


XX responded in awe and cried for having chosen a wrong choice in the last election. Every single problem of Indian citizen came out and i could see no one was satisfied with any of the choices left. Each party seemed to have its own defects. Yet, the government was running successfully. 

Out of all the non-sense things i could hear, came a distinct sound gradually descending. brrrrrrr ... brr... br.




Gosh! Let this be over already. 

After a few strange looks and whispers, people were back on track (!!!) to talk off the time remaining. Men talks ... the scorching sun, failing rain, dirty bus stand, next election choices, pongal release movies, cine-gossips, huff ... ! Is there something in the world, people cannot talk  on ?

At last, it was 4.54 and the conductor had the mercy to let us in. Words won't suffice to describe the stampede. Though I was standing just front of the door, it wasn't I who entered first. The bag I carried pulled down my specs and I went searching for it only to grab it from the feet of a pot bellied white dhoti man. When I boarded in, I could get only the left end seat of the last row. 

I felt totally relieved. I felt like a successful king after a war, sitting majestic on the throne; wind from the side window was as if a smile faced girl fanning me with peacock feathers. 

Soon, the conductor came rushing through the army of sepoys to drive me up. 

It was his seat.


Tuesday, 19 March 2013

கடவுளின் கனவு




என் தூக்கத்தை திருடிய கனவு :
கடவுளாய் காட்சிப் படுத்தியது என்னையே என் கனவு  !

உலகங்கள் படைக்கும் முன்னே, உருவத்தின் கனவு:
சதுரங்கள், முக்கோணங்கள் வசதியாய் இல்லை: உருட்டி விளையாட,
உருளையாகிப் போனது உலகம் !

கனவுக்குள் கனவுகளாய் ஓவியங்கள்  அவை
சூழல்கள் செதுக்கும் காவியங்கள்!
  
இருள் வெளியில் ஒளி ஊட்டி,
கடல் அலைகள் குவித்த மணலில், மலைகள் கட்டி,
புழுக்களில் தொடங்கியது பூவுலகம்;
மனிதனில் முடிந்தது பரிணாமம்.

நான் படைத்த மட மானிடர்கள்
என்னையே வடிக்கிறார்கள், பல வேடங்களில் !

கூட்டலில் அறைந்து என்னைச் சுற்றி கூடி அழுகின்றனர்;
ஒரு பக்கம்,
தும்பிக்கை கொடுத்து, ஒரு தந்தத்தை உடைத்து,
நம்பிக்கை வைக்கின்றனர் என் மேல்;
அசுரர்கள் சித்தரித்து, அவர்களை அழிக்கும் அவதார புருஷனாய்
ஆயுதங்கள் தரித்து ஆலயம் எழுப்பி புரியாத மொழியில் புலம்புகின்றனர்.
தங்களுக்கே புரியாத மொழியில் புலம்புகின்றனர்.

வினை தீர்க்க வெள்ளைத் திருநீறாம்;
செயல் கைகூட சிவப்புக் குங்குமமாம்;
அவர்களாய் கேட்டுக் கொள்கிறார்கள் வாக்கு !
படையல் என்ற பெயரில் பலிகள் கொடுத்து,
காவல் தெய்வத்திற்கு கெடா வெட்டி,
காணிக்கையாய் குவாட்டர் கொடுத்து,
தன்னை வருத்தி விரதங்கள் இருந்து,
அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி,
அடங்கா ஆசைகளை வேண்டுதலாய் வெளிப்படுத்தி,

"நாயகன் நான் இருக்கிறேன்", என்பதை மறந்து,
'நான் கடவுள்', 'நான் கடவுள்' என
நாடகமாடி, அறைகூவல் விடுக்கும் அறிவிலிகளை நம்பி,
சோரம் போகும் சோம்பேறிகளின்
பிரார்த்தனைகள் பல கோடி.

நான் நிகழ்த்தியவை ஒரு பகுதியாய்,
நடப்பவை மறு பகுதியாய்,
துயிலுக்குள் துன்புறுத்த,
எதிர்காலம் – "அது என் கையில் தானே" என்ற,
எக்களிப்பில் எழுந்து விட்டேன் :
இன்றைய பலரின் கனவுகளுக்கு ஊமையாய் செவி சாய்க்க !


சித்தர்கள் அருள் பாலிக்க வேண்டி,
பித்தர்கள் பாவங்களைப் போக்க வேண்டி,
சிலர் தம் குறைகளைத் தீர்க்க வேண்டி,
சிலர் தம் நோய்களை நீக்க வேண்டி,
சிலர் தம் செல்வத்தைப் பெருக்க வேண்டி,
சிலர் தம் சோகத்தை சுருக்க வேண்டி,
தகப்பன்  சாதிக்குள் மணம் முடிக்க வேண்டி,
மகனோ  மனம் நினைத்தவளை கைப்பிடிக்க வேண்டி;
அழகுக்கு மெருகூட்ட வேண்டி  சிலர்
அடிவயிற்றில் ஆறு அடுக்குகள் வேண்டி :
செல்கிறார்கள் கோயிலுக்கு !

கடவுளாகிய நான் செல்கிறேன்,
கோயில் காவலர்களின் தட்டு நிறைய வேண்டி :
பாதையோரத்தில் பயணித்து,

'அம்மா! தாயே!' என்று, அறைகூவல் விடுக்கும் 

காவலர்களின் தட்டு நிறைய வேண்டி !



Monday, 18 March 2013

கானல் நீரில் கனா காணும் மீன்கள்



காலங்கள் கடந்து காவியங்கள் படைத்திட,
கால்நடையாய் செல்லும் தேசாந்திரி மீன்களுக்குத்
தாகம் தணிக்க எட்டாத் தொலைவிலிருக்கும்   
முன்னேறிய பாரதம் என்ற கானல் நீர் தான்  -
முழு நேர இலக்கு !

கெண்டை மீன் :


கழனிகளில் கால் பதித்து,
கார்மேகக் கனிகளும் பொய்த்துப் பெய்வதால்,
விளைச்சல் இல்லாமல் விலை போகும் கெண்டை மீன்களுக்கு,
விடிவு எப்பொழுது என்ற கனவு !

வாள மீன் :


சோர்வின்றி சமுதாயச் சுமை தாங்கும் வர்க்கம்;
உரிய ஊதியம் இல்லை என்றாலும்,
உழைப்பை உவந்து கொட்டும் தினக்கூலி வாள மீன்களுக்கு
அன்றாடத்திற்கு அடிப்படை அமைப்பதே வாழ்நாள் கனவு !

அயிரை மீன் :


சுருங்காத சிந்தையோடு அயராது பாடுபடும் இளைய சமுதாயம்;
மாய வலைகளில் சிக்காமல்,
வியாபாரச் சந்தையில் தன் விலை உயர்த்திக் கொள்ள,
வாய்ப்பு கிடைப்பதே ஒரு பகற்கனவு தான்.

வஞ்சிரம் :



வஞ்சனையை வெளிக்காட்டா வஞ்சிர மீன்களுக்கு,
சூறையாடும் கயவர்களிடமிருந்து தப்பித்து,
சுதந்திரத்தோடு சுற்றத்தில் சுயத்தை நிலை
நிறுத்திக் காட்டும் வண்ண வண்ணக் கனவுகள் !

சுறா :


நான் ரொம்பப் பசியானவன்;
நாவில் பணத்தின் ருசி ஏறியவன்;
போக்குகள் காட்டி வாக்குகள் பெற்று,
வஞ்சனை அரியணை மீதேறி ஆயிற்று !
உண்டு செழித்து விட்டேன்:
உயிர்களின் பகடை ஆட்டத்தில் !
பரம்பரைகள் படைத்து, பரமபதம் அடைய,
பதவியேறி புசிக்கப் புறப்பட்டு விட்டேன்,
அடுத்த ஐந்தாண்டிற்கு !


தேயாத பாதங்களுக்குக் கீழே,
பாதைகள் உருண்டோடினாலும்,
கனவுகள் கலையாது,
தாகங்கள் தணியாது,
கானல் நீர் அடையும் வரை !


Sunday, 3 February 2013

முதல் காதல்

அவள் ...
எங்கள் வீட்டிற்கு தீண்டத்தகாதவள்.

சற்று தூரத்தில் அவள் வரும் அறிகுறி தெரிந்தாலே வீட்டின் கதவு, ஜன்னல், முக்கியமாக மொட்டை மாடிக் கதவு சாத்தி அடைக்கப்படும். இருக்கிற வேலை பத்தாதுனு இந்த சனியன உள்ள வர விட்டா, வீட்ட நாலு தடவ தொடச்சாலும் பத்தாதுஎன்று அம்மா புலம்புவது இன்னும் ஞாபகம் இருக்கிறது. எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் எப்பொழுது ரசிக்க ஆரம்பித்தேன் என்று நினைவிற்கு வரவே மாட்டேன் என்கிறது.

பல முறை அவள் வர மாட்டாளா என்று ஏங்கி இருக்கிறேன். ஆனால் எதிர்பாராத நாளன்று வந்து விட்டால் பல வேலைகளை கெடுத்து விட்டாளே என்று கோபம் கோபமாக வரும்.

தவிர்க்க முடியாமல் அவள் சில முறை வீட்டிற்குள் நுழைந்து விடுவது உண்டு. எலிகள் கொறித்த நிலவு கால் தான் அவளின் நுழைவு வாயில். மதிய உணவு தந்த போதையில் மயங்கிக் கிடக்கும் அப்பாவும் அம்மாவும் பதறி அடித்துக் கொண்டு எழுந்து விடுவார்கள். வெளியே தள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு வீட்டைத் துடைக்க இரண்டு வாளிகள் தண்ணீருடன் ஒரு பழைய கிழிந்த பனியன் துணியையும் எடுத்துக் கொண்டு வந்து நிற்பாள் அம்மா. துடைத்து முடித்து வீடு காயும் வரை யாரும் வீட்டிற்குள் நடக்கக் கூடாது. மீறக் கூடாத விதி.

அவளுக்கு முன்னோடியாய் வரும் ஈரக் காற்று மண் வாசனைஎன்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அந்த போதையில் திக்கு முக்காடிப் போகும் பலரைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். எனக்கு அந்த வாசனை பரிச்சயப் பட்டதே இல்லை.

அவளை ரசித்துக் கொண்டாடிய ஒரு நிமிடம் மட்டும் நெஞ்சில் ஒரு புதையலாய் ... வயது ஏழு இருக்கும். அன்று அவள் வருவது அறிந்தவுடன் ஆயத்தமானேன். யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்கு சென்று அவளை ரசித்த படியே பாடி ஆடத் தொடங்கினேன் சற்று தினங்கள் முன் பார்த்த என் சுவாசக் காற்றேபடத்திலிருந்து
ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து  வைப்பேனோ   என்ற வரிகள் குழறுபடியாய் என் வாய்க்குள்.

இன்று அவள் வரவில்லை. ரோட்டின் நடுவே நெடுஞ்சாலை அமைப்பாளர்கள் குவித்து வைத்திருந்ததில் இருந்து கிளம்பிய புகை, அதிலிருந்து அடைக்கப்பட்ட அலாவுதீன் போல வெளி வந்த மண் வாசனை . அவள் என்று வருவாள் என் வீட்டிற்கு என்று ஏங்க வைத்து விட்டது.



காத்திருக்கிறேன் ... நீ வருவாய் என . என் முதல் காதலியே! 




 மழையே !




Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...