Monday, 13 May 2013

அன்று மதம், இன்று மொழி


அன்று மதம் மட்டும் …  இன்று மொழியும் ! (Topic has been updated due to circumstances.)

அவனைத் தொடாதே, அவன் ***** ”, என்ற காலம் போய் விட்டது என்று ஒருவாறு கருதிக் கொள்ளலாம். என் பாட்டி வீட்டிற்கு சிறு வயதில் செல்லும் போதெல்லாம் வீட்டு வேலைக்கு வரும் வெள்ளையம்மாவுக்கு என்று தனியாக ஒரு டம்ப்ளர், தட்டு எல்லாம் இருக்கும். அவள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்தவுடன் சந்தில் உட்கார வைத்து சாப்பாடு போட்டு கையில் கொடுக்க வேண்டுமேஎன்று ஒரு சில பத்து ரூபாய் தாள்களை திணித்து அனுப்புவார்கள்.

இன்று பட்டணத்தில், (எங்கள் ஊரில், வீட்டுப் பெண்களே வேலை செய்து கொள்கிறார்கள்) வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் சேரும்போதே, மாதம் இரண்டாயிரத்து ஐநூறு, தீபாவளி பொங்கல் போனஸ், மாதம் 3 நாட்கள் லீவு போட்டுக் கொள்ள அனுமதி இன்னும் இன்னும் என நீள்கிறது கண்டிஷன்ஸ் லிஸ்ட்.

பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என நிறுவனங்களிலும் சேர்க்கையின் போது மட்டும் தான் சாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுகின்றன. சில கிறுக்கர்கள் இருந்தாலும், ‘மத வெறி மடையர்கள், மாணவர்களுக்கிடையே இல்லை’, என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.

ஆனால் இன்று வேறு ஒரு பாகுபாடு .

மொழி வேறுபாடு.

தென்னிந்தியக் குடிமகன் ஒருவன், இந்தி தெரியாமல் வடக்கிற்கு சென்று திரும்புவதற்குள் படும் பாடு சொல்லி மாளாது. என்ன மொழி பேசினாலும், அவன்மதராசி?” என்று ஏளனமாகப் பார்க்கப்படுவது, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் துன்பத்தைக் காட்டிலும் கொடியது. வேண்டுமென்றே, சிலர்  சண்டைக்கிழுத்து குளிர் காய்வார்கள்.

அவ்வளவு ஏன், ஒரு அலுவலகத்தில் புதிதாக சேரும் மலையாளம் (அ)தெலுங்கு பேசும் ஊழியரிடம் ஒரு தமிழன் பழகுவதற்கு ஆகும் காலம் – மாதக் கணக்கில் ஆகின்றது என்பது பல இடங்களில் உண்மை.

நமது ஆட்களும் சளைத்தவர்கள் அல்ல. அவன் நம்மவன் இல்லை என்று உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே இருக்கும் போலும். இல்லை, ‘தனக்கு தெரியாத மொழியில் அவன் பேசுகிறான்’, என்ற காழ்ப்புணர்ச்சியாய் இருக்கலாம்.

சென்ற வருடம், செய்தித் தாளில் படித்த ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. விடுதி உணவகத்தில், என்ன உணவு சமைக்க வேண்டும் என்ற போட்டியில், வட-இந்திய மாணவர்களுக்கு சாதகமாக, வாரத்திற்கு நான்கு நாட்கள் சப்பாத்தி போடும் சமையல் காரருடன் சண்டை வளர்த்த மாணவர் கூட்டத்தை, சமாதானம் செய்தனர் விடுதிக் காப்பாளர்கள்.

மொழிச் சண்டை ஒரு சமூகத்தை அழிக்கும் அளவிற்கு வளர விட்டது மானுட முட்டாள்தனத்தின் உச்சம்.

தமது மொழி பேசுவோரிடம் ஒரு மாதிரி மனோபாவத்துடனும், தமிழர்களிடம் மிடுக்கான தோரணையும் காட்டும் பலரை நம்மிடையே காண முடிகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் வேறுபாடு வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. வேற்று மொழி தான், அடிமைத்தனத்துக்கு அடித்தளமாக இருந்தது. ஆனால், நமது மொழி சார்ந்தவர் அல்லாதோரை ஒரு சிற்றுயிராகக் கருதாமல், மனிதனாக மதித்தால் மட்டும் போதும்.

‘காட்சியகத்தில் காணும் அரிய வகை உயிரிகள் அல்ல அவர்கள்’, என்ற கண்ணோட்டம் பிறக்க வேண்டும்.

மாற்றங்களை ஏற்கும் மனப்பாங்கு வேண்டும்.

No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...