Monday, 18 March 2013

கானல் நீரில் கனா காணும் மீன்கள்



காலங்கள் கடந்து காவியங்கள் படைத்திட,
கால்நடையாய் செல்லும் தேசாந்திரி மீன்களுக்குத்
தாகம் தணிக்க எட்டாத் தொலைவிலிருக்கும்   
முன்னேறிய பாரதம் என்ற கானல் நீர் தான்  -
முழு நேர இலக்கு !

கெண்டை மீன் :


கழனிகளில் கால் பதித்து,
கார்மேகக் கனிகளும் பொய்த்துப் பெய்வதால்,
விளைச்சல் இல்லாமல் விலை போகும் கெண்டை மீன்களுக்கு,
விடிவு எப்பொழுது என்ற கனவு !

வாள மீன் :


சோர்வின்றி சமுதாயச் சுமை தாங்கும் வர்க்கம்;
உரிய ஊதியம் இல்லை என்றாலும்,
உழைப்பை உவந்து கொட்டும் தினக்கூலி வாள மீன்களுக்கு
அன்றாடத்திற்கு அடிப்படை அமைப்பதே வாழ்நாள் கனவு !

அயிரை மீன் :


சுருங்காத சிந்தையோடு அயராது பாடுபடும் இளைய சமுதாயம்;
மாய வலைகளில் சிக்காமல்,
வியாபாரச் சந்தையில் தன் விலை உயர்த்திக் கொள்ள,
வாய்ப்பு கிடைப்பதே ஒரு பகற்கனவு தான்.

வஞ்சிரம் :



வஞ்சனையை வெளிக்காட்டா வஞ்சிர மீன்களுக்கு,
சூறையாடும் கயவர்களிடமிருந்து தப்பித்து,
சுதந்திரத்தோடு சுற்றத்தில் சுயத்தை நிலை
நிறுத்திக் காட்டும் வண்ண வண்ணக் கனவுகள் !

சுறா :


நான் ரொம்பப் பசியானவன்;
நாவில் பணத்தின் ருசி ஏறியவன்;
போக்குகள் காட்டி வாக்குகள் பெற்று,
வஞ்சனை அரியணை மீதேறி ஆயிற்று !
உண்டு செழித்து விட்டேன்:
உயிர்களின் பகடை ஆட்டத்தில் !
பரம்பரைகள் படைத்து, பரமபதம் அடைய,
பதவியேறி புசிக்கப் புறப்பட்டு விட்டேன்,
அடுத்த ஐந்தாண்டிற்கு !


தேயாத பாதங்களுக்குக் கீழே,
பாதைகள் உருண்டோடினாலும்,
கனவுகள் கலையாது,
தாகங்கள் தணியாது,
கானல் நீர் அடையும் வரை !


No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...