Tuesday, 19 March 2013

கடவுளின் கனவு




என் தூக்கத்தை திருடிய கனவு :
கடவுளாய் காட்சிப் படுத்தியது என்னையே என் கனவு  !

உலகங்கள் படைக்கும் முன்னே, உருவத்தின் கனவு:
சதுரங்கள், முக்கோணங்கள் வசதியாய் இல்லை: உருட்டி விளையாட,
உருளையாகிப் போனது உலகம் !

கனவுக்குள் கனவுகளாய் ஓவியங்கள்  அவை
சூழல்கள் செதுக்கும் காவியங்கள்!
  
இருள் வெளியில் ஒளி ஊட்டி,
கடல் அலைகள் குவித்த மணலில், மலைகள் கட்டி,
புழுக்களில் தொடங்கியது பூவுலகம்;
மனிதனில் முடிந்தது பரிணாமம்.

நான் படைத்த மட மானிடர்கள்
என்னையே வடிக்கிறார்கள், பல வேடங்களில் !

கூட்டலில் அறைந்து என்னைச் சுற்றி கூடி அழுகின்றனர்;
ஒரு பக்கம்,
தும்பிக்கை கொடுத்து, ஒரு தந்தத்தை உடைத்து,
நம்பிக்கை வைக்கின்றனர் என் மேல்;
அசுரர்கள் சித்தரித்து, அவர்களை அழிக்கும் அவதார புருஷனாய்
ஆயுதங்கள் தரித்து ஆலயம் எழுப்பி புரியாத மொழியில் புலம்புகின்றனர்.
தங்களுக்கே புரியாத மொழியில் புலம்புகின்றனர்.

வினை தீர்க்க வெள்ளைத் திருநீறாம்;
செயல் கைகூட சிவப்புக் குங்குமமாம்;
அவர்களாய் கேட்டுக் கொள்கிறார்கள் வாக்கு !
படையல் என்ற பெயரில் பலிகள் கொடுத்து,
காவல் தெய்வத்திற்கு கெடா வெட்டி,
காணிக்கையாய் குவாட்டர் கொடுத்து,
தன்னை வருத்தி விரதங்கள் இருந்து,
அக்கினிச் சட்டி ஏந்தி, அலகு குத்தி,
அடங்கா ஆசைகளை வேண்டுதலாய் வெளிப்படுத்தி,

"நாயகன் நான் இருக்கிறேன்", என்பதை மறந்து,
'நான் கடவுள்', 'நான் கடவுள்' என
நாடகமாடி, அறைகூவல் விடுக்கும் அறிவிலிகளை நம்பி,
சோரம் போகும் சோம்பேறிகளின்
பிரார்த்தனைகள் பல கோடி.

நான் நிகழ்த்தியவை ஒரு பகுதியாய்,
நடப்பவை மறு பகுதியாய்,
துயிலுக்குள் துன்புறுத்த,
எதிர்காலம் – "அது என் கையில் தானே" என்ற,
எக்களிப்பில் எழுந்து விட்டேன் :
இன்றைய பலரின் கனவுகளுக்கு ஊமையாய் செவி சாய்க்க !


சித்தர்கள் அருள் பாலிக்க வேண்டி,
பித்தர்கள் பாவங்களைப் போக்க வேண்டி,
சிலர் தம் குறைகளைத் தீர்க்க வேண்டி,
சிலர் தம் நோய்களை நீக்க வேண்டி,
சிலர் தம் செல்வத்தைப் பெருக்க வேண்டி,
சிலர் தம் சோகத்தை சுருக்க வேண்டி,
தகப்பன்  சாதிக்குள் மணம் முடிக்க வேண்டி,
மகனோ  மனம் நினைத்தவளை கைப்பிடிக்க வேண்டி;
அழகுக்கு மெருகூட்ட வேண்டி  சிலர்
அடிவயிற்றில் ஆறு அடுக்குகள் வேண்டி :
செல்கிறார்கள் கோயிலுக்கு !

கடவுளாகிய நான் செல்கிறேன்,
கோயில் காவலர்களின் தட்டு நிறைய வேண்டி :
பாதையோரத்தில் பயணித்து,

'அம்மா! தாயே!' என்று, அறைகூவல் விடுக்கும் 

காவலர்களின் தட்டு நிறைய வேண்டி !



No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...