Sunday, 9 March 2014

திரும்பிப் பார்க்கிறேன்: திருவொற்றியூர்

Industrial Internship at Thiruvottiyur, Chennai : எண்ணி வைத்தார் போல் கிடைத்த எண்பது நாட்கள் முடிந்து விட்டன. புதிய தேடல்களும் எதிர்பார்க்காத முடிவுகளும் இங்கே தான் தொடங்கியது என்று சொல்வதற்கு வாகாய் பழைய மெட்ராஸில் வடக்கோரமாய் திருவொற்றியூர். இங்கே தான் சென்னையின் அடையாளங்களைக் கண்டறிந்தேன் என்று கூட சொல்லலாம். சென்று இறங்கிய தினம் தோன்றிய முதல் எண்ணம்: உழைப்பாளிகள் வாழும் இடம் இது. 



உண்மை தான். சென்னையை சொந்த ஊராகக் கொண்டவர்கள் தாம் செய்யும் வேலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களை திருப்திப் படுத்தும் ஒரே விஷயம் : Getting Recognized for their work. Acknowledgement. பல இடங்களில் பணமோ ப்ரொமோஷனோ கூட வேண்டாம். 

எந்த வேலையும் செய்யாமல் உட்கார வைத்தால் நான் எவ்வளவு தொந்தரவு கொடுப்பேன் என்று சக ஊழியர்க்கு உணர்த்திய தருணங்கள்... வேலைப்பளு அதிகமாக ஆக என் சுயம் எப்படி எல்லாம் வெளிப்படும் என்று அறிந்து கொண்ட நாட்கள் ... என்னை நான் வரையறுத்துக் கொண்டது இங்கே தான் என்று சொல்லலாம்.

நான் தினம் ஏறும் பேருந்து நிறுத்தத்தின் பக்கத்திலேயே அரசின் உணவகம் இருந்தாலும், ஒரு நாளாவது அங்கே ஒரு ரூபாய் இட்லியும் ஐந்து ரூபாய் பொங்கலும் வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், உள்ளே பலர் நம்பிக்கையூட்டும் வகையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது. அடுத்த முறை (ஆட்சி மாறுவதற்குள்) வரும்போது கண்டிப்பாக ஒரு கை பார்த்து விட வேண்டும். கவனிக்க: இங்கு பார்சல் வழங்கப் பட மாட்டாது.



திருவொற்றியூரில் எனக்கு அமைந்த சுவாரஸ்யங்களில் ஒன்று: இங்குள்ள விளம்பர பேனர்கள். இந்த பேனர்களில் வாசகங்கள் எழுத எத்தனை பேர் கொண்ட குழு இருக்கும் என்று பார்க்கும்போதெல்லாம் வியந்திருக்கிறேன். தினம் ஒரு சவ ஊர்வலம் அல்லது இருபதுக்கு இருபது அடி கல்யாண அழைப்பு விளம்பரம் (அ) குறைந்தபட்சம் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் (ஒரு வயது முதல் அதிகபட்சமாக எண்பத்தெட்டு வயது வரை குழந்தைகளின் அச்சடித்த சிரிப்புகளை பார்த்து விட்டேன் !). வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு உற்சாகமான நாளாக மாற்றி அமைத்துக் கொள்ளும் மக்களுக்கிடையே வாழ்கிறேன் என்ற திருப்தி உண்டானது. 

இங்குள்ள பெயர்ப் பலகைகளில் தமிழை முதல் முறை பார்த்த போது, மெலிதான சிரிப்பு தோன்றியது.
Greenland Snack Bar – பச்சை  நிலம் நொறுக்குத் தீனியகம்.
Fashion Wears         – தினுசு ஆடையகம்.
                 Digital Printers        – எண்முறை அச்சகம்

சென்னையில் மெட்ரோ வாட்டர் லாரியில் வரும் என்பதை நேரில் கண்டது இந்த பகுதியில் தான். மக்கள் குடங்களோடு வரிசையில் சண்டையிடுவதும், மெட்ரோ வாட்டர் வராமல் போனால் போர் தண்ணீரில் குளிப்பது எவ்வளவு கொடியது என்றும் உணர்ந்த நாட்கள். 

எல்லாவற்றிற்கும் மேலாக, தனிமையின் சந்தோஷங்களை அனுபவித்து உணர்ந்த நாட்கள் என் வாழ்வின் மிக முக்கிய பாடம். முடிவுகளை எதிர்நோக்கிய பயணம், படிக்கும் காலத்தோடு முடிந்து விட்டது. நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் கிடைத்து விட்ட திருப்தியில், இனி எது வரினும் அதை ஏற்பது என்ற தெளிவுடன், திரும்பி செல்கிறேன்.  (15.02.2014)


No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...