Sunday, 2 December 2012

வாழ்க்கை ஒரு பயணமல்ல




“வாழ்க்கை ஒரு பயணம் போன்றது” என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். இந்த நிமிடம் வரை அது உண்மை என்று நம்பியிருந்தேன்.

ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்; அந்த இலக்கை அடையும் வரை கரடு முரடான பாதையில் நடந்து, உருண்டு பிரண்டு தான் ஆக வேண்டும். பக்கத்தில் அல்லது பின்னே வருபவர் நம்மை முந்திச் சென்று விடுவாரோ என்ற பயம் வேறு !


நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ரயில் சிநேகம் போலத் தான் அமைகின்றனர். ஒரு சந்திப்பில் சேர்ந்து கொண்டு சிறிது தூரம் நம்முடன் பயணித்து விட்டு, மற்றோர் சந்திப்பில் இறங்கி விடுகின்றனர். யோசித்து பார்த்தால், நண்பர்கள் மட்டுமல்ல, ரத்த சொந்தங்களும் இப்படித்தானோ என்ற ஐயம் தோன்றுகிறது.

இவ்வளவு கடினமான பாதையிலும் நம்மை ஓட வைக்கும் உந்து சக்தி எது ?

பணம் என்பார் சிலர்.
பாராட்டு என்பார் சிலர்.
பதவி என்பார் பலர்.

இந்த அற்ப விஷயங்களால் உண்மையாகவே ஓர் தனி மனிதனின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியுமா ? அவற்றிற்கு இந்த வலுவை தந்தது யார் ? இவற்றை இயற்றியவனும் மனிதன் தான் இவற்றின் பின்னால் இன்று ஓடிக் கொண்டிருப்பவனும் மனிதன் தான்.

உலகமே தேவை என்றால் தான் உன்னை தேடும். அன்பும் ஓர் தேவை தானே - தனிமையில் !!!

காலத்தின் கட்டாயம், விதி வலியது என்று நம்முடைய தவறுகளுக்கெல்லாம் ஏதோ ஒரு தெய்வ சக்தியின் மேல் பழி போட்டு விட்டு மீண்டும் அதே பாதையில் பயணிக்க தொடங்குகிறோம். இல்லை தொடர்கிறோம்.


இதுவா வாழ்க்கையின் கோட்பாடு ?

இல்லை.

வாழ்க்கை ஒரு பயணமல்ல.

No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...