Tuesday, 13 November 2012

பல் துலக்குதல்

பற்கள்.  
சாப்பிடுவதற்கும் பேசுவதற்கும் என உயிரியல் பாடத்தில் படித்திருக்கிறேன் .

அழகை அழகாய் வெளிப்படுத்தும் சிரிப்பை அழகு படுத்த பற்கள் அழகாய் இருக்க வேண்டும்.


பல் துலக்காமல் ஏதாவது வேலையை துவங்கி இருக்கிறீர்களா ? அந்த வேலை எவ்வளவு முக்கியமானதாகவே இருக்கட்டும். வேகமும் இருக்காது, செய்து முடிக்கும் உத்வேகமும் இருக்காது. காலை எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு காபி குடிக்கவில்லையெனில் அந்த நாளில் எந்த செயலிலும் ஓர் ஒட்டுதல் இருக்காது.

ஆனால் விடுதி வாழ்க்கை எல்லாவற்றையும் மாற்றி விட்டது. இப்பொழுதும் சைவ உணவகங்களில் ரவா தோசையோ வெங்காய ஊத்தாப்பமோ சாப்பிட்டால் உடனே காபி குடித்து விடுவேன்.

அதெல்லாம் போகட்டும். என்னை எழுதத் தூண்டிய (பல்) தூரிகை எது ? விடுதியில் இருக்கும்போது பல் துலக்குவது என்பதே ஒரு போராட்டம். மிகவும் சிரமப்பட்டு நினைவில் வைத்துக் கொண்டு பற்பசை வாங்கி வைப்பவன், அடுத்த நாள் காலை முதலில் பல் துலக்கி விட வேண்டும். (ஒரு நாளாவது நாம் வாங்கிய பொருளை நாம் அனுபவிக்க வேண்டும் என்ற வைராக்கிய உணர்வு).

‘பல் துலக்கி விட்டு தான் சாப்பிட வேண்டும்’ என்னும் கோட்பாடுடைய நல்ல உள்ளங்கள் எப்படியாவது பல் துலக்கி விடுவார்கள். அறை அறையாகச் சென்று “மச்சி பேஸ்ட் இருக்கா ?” என்று வெட்க சிரிப்புடன் கேட்டு பெற்று விட்டு, நன்றி சொல்கிறேன் பேர்வழி என்று நலம் விசாரித்து விட்டு செல்வார்கள். நிறை  மாத கர்ப்பிணியாக இருந்த பசை, குறை பிரசவத்தில் தவிப்பாள்.





















ஒளித்து வைத்து விட்டு “இல்லை” என்று சொல்லி துரத்தும் தந்திரம் எல்லாம் பலிக்காது. ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தேடி எடுத்துச் செல்லும் முனைப்பு உடையவர்கள் நாங்கள்.


என் நண்பருக்கு பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது பேசினாலோ, பேப்பர் படித்தாலோ பிடிக்காது. அவரை பொறுத்த வரை அந்த ஒரு காலை கடனை முடிக்கும் வரை காத்திருக்க முடியாதது எதுவும் இல்லை.

காலை எழுந்தவுடன் கண்ணில் வழியும் தூக்கத்தை கலைத்து புதுப்பொலிவை புகுத்தும் ஓர் அற்புத உடற் பயிற்சி ...

அலாரம் வைத்தும் எழ முடியாத கோபத்தை செயல் வேகத்தில் செலுத்த உந்தும் கோல் ...

ஒவ்வொரு நாளும் பல் துலக்குதல் ஒரு கடமையாக நினைத்து கொண்டு செய்யாமல், கிடைத்த பசையை வாய்க்குள் செலுத்தாமல், உள்ளத்திற்கு புத்துணர்வூட்டும் புது தின தொடக்கமாகக் கருதி துலக்குங்கள்.

அழுக்கை அகற்றி அழகாக்குங்கள் ...
ஆனந்தம் பொங்கட்டும்.



No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...