கல்லூரியில் முனைப்போடு பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்த போது, ஒருவருக்கொருவர் தலைப்புகள் கொடுத்துக் கொண்டு பயிற்சி எடுத்துக் கொள்வது உண்டு. பயிற்சிக்காக தோழி ஒருவர் எனக்கு தேர்ந்தெடுத்த தலைப்பு: ‘தீவிரவாதம்’. தலைப்பை கேட்டவுடன், எப்பொழுதும் போல முந்திக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டேன்.
“ஒரு சிந்தனை அல்லது ஒரு கூற்று, மனதில் ஆழப் பாய்ந்து அதுவே வாழ்வியலாய் மாறித் தீவிரமாகிப் போகும் போது அது தீவிரவாதம் ஆகிறது. ஆயுதம் ஏந்தி அரசை எதிர்த்து அறைகூவல் விடுத்தோ, சமூகத்தை திருத்தும் அல்லது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்கோடோ, போராட்டங்கள் மேற்கொண்டால் தான் தீவிரவாதம் என்றில்லை. ஒரு சராசரி குடும்பத்திற்குள் குரலை உயர்த்தாமல் கருத்தை அழுந்தச் சொல்லும் ஒவ்வொரு வாதமும் தீவிரவாதம் தான். சூழ் நிலைகள் மாற வாதிகளுக்கு அளிக்கப்படும் பெயர் வழக்கறிஞர், அரசியல் வாதி, அடங்காப் பிடாரி, சமூக ஆர்வலர், தொண்டு, இன்னும் பல பல. தொண்டு என்பது
வினைச்சொல்லிலிருந்து விளிச்சொல்லாய் மாறிப் போன அவலம் தனிக் கதை…”
வரலாற்றில்,
தீவிர சிந்தனைகளை நம்முள் விதைத்தவர்கள் தான் பெரும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும்
வழி நடத்தியுள்ளனர். அவர்களே நாளடைவில் தத்தம் சமுதாயங்களுக்கும் நாடுகளுக்கும் தலைவர்களாகிப்
போனது தனி போக்கு. இத்தகைய போக்கையே மாதிரியாகக்
கொண்டு சில தான் தோன்றித் தலைவர்கள் தோன்றி மக்களாட்சியை வென்றவரும் உள்ளனர்; தோற்றவரும்
உள்ளனர். தற்காலத்தைய தீவிரவாதிகளில், நேற்று வரை நான் பார்த்தவர்கள், சமூக அக்கறையை
முன்னிறுத்திக் காட்டி மக்கள் மனதில் இடம் பெறும் வாய்ப்பு வேட்டையாடும் வேளைக்கூத்தர்களாகத்
தான் என் மனதில் பதிந்தனர்.
கடந்த சில தினங்களில் முன்னணி வாதிகள் எவ்வித அரசியல் பின்புலமும் அற்ற சமுதாய நலன் ஒன்றையே நோக்கமாக்கிக் கொண்டு இளைஞர்களை/ மாணவர்களை வழி நடத்தும் போக்கு ஊக்கமளிக்கிறது. அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலில்
எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்ற பார்வையில் விவாதங்கள் நடக்காமலே போனதாலேயோ, நடந்தும்
கவனிக்கப் படாமலே போனதாலேயோ தான் மே 17, நர்மதா பசாவோ போன்ற இன்னும் பல இயக்கங்கள்
மூலமாக தீவிர விவாதங்கள் முன்னுக்கு வந்தன. ஆயிரம் மரங்களை வெட்டி ஆதி நாதருக்கு சிலை
வைத்ததையும் மீம்ஸ் போட்டு கவனம் ஈர்த்த இளைஞரின்
செயல்பாடும் ஒரு வகையான தீவிர வாதம் தான். ஆட்சித் துறை செயலரே ஆட்சியாளர்கள் செய்யும்
ஊழல்களை பட்டியல் போட்டுக் காட்டியதும் அவர்களை எதிர்த்துக் கொண்டு நீதியை நிலைநாட்ட
மேற்கொண்ட போராட்டமும் தீவிர வாதம் தான்.
நண்பர்களே,
குற்றங்களை சுட்டிக் காட்டி வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டுமே குடியரசை ஆட்சி
செய்யும் தகுதியைக் கொடுத்து விடாது. தவறை தவறு என்று முழங்குவதால் மட்டுமே அவரை முதன்மை
அமைச்சகத் தலைவராய் அமர்த்தக் கூடாது. தவறை செய்தவர் தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
தலைவர்களே, இளைஞர்கள் உம்மை நம்பி பின் நிற்பது நீங்கள் அவர்களை பயன்படுத்திக் கொள்ள மாட்டீர்கள் என்ற ஒரே நம்பிக்கையோடு தான். அவர்கள் உங்களை எந்த வேகத்தில் முன் நிறுத்துகிறார்களோ, அதே வேகத்தில் கீழே தள்ளவும் துணிவார்கள் என்பதை மனதில் கொண்டு செயல் படுங்கள்.
ஊடகங்களே! சுற்றுச் சூழல் நல்லிணக்கத்தை பாதிக்கும் அரசின் செயல்பாடுகளை, திட்டங்களை முன்னெச்சரிக்கையோடு ஆராய்ந்து அதன் பின் விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்து விவாத மேடைக்கு எடுத்து வரும் இந்தப் போக்கு வரவேற்கத்தக்கது தான். ஆனால் எம் இளைஞர் வட்டம் உங்கள் ஒவ்வொரு வரிகளுக்கிடையே இருக்கும் அர்த்தங்களையும் உன்னித்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
P.S.:
‘தீவிரவாதம்’ translates to ‘Extremism’ and ‘Terrorism’ to ‘பயங்கரவாதம்’
No comments:
Post a Comment