Thursday, 22 January 2015

போதை

     கொஞ்சம் கொஞ்சமாய் இதற்கு அடிமைப்பட்டு வருகிறேன். கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள் சிலர் செய்கிறார்கள், நாமும் செய்து பார்ப்போமே என்று துவங்கியது. இப்பொழுதோ வாரத்தில் இரண்டை விழுங்கி விடுகிறேன். நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம், அதில் கிடைக்கும் ஆனந்தம், ஒரு வகை புத்துணர்ச்சி, எதையோ சாதித்து விட்டது போல் பேருவகை... தீரத்தீர, 'அடடா கடங்காரன் இன்னும் கொஞ்சம் கொடுத்திருக்கக் கூடாதா? அஞ்சு பத்து சேர்த்துக் கொடுத்தாலும் 'இந்த மாச ரேஷன் இவ்வளவு தான்' என்று, பசி ஏக்கப் பார்வையைப்  பற்றி கவலைப்படாமல், கன்றுக்குட்டியை இழுத்துக் கட்டிவிட்டு மடி காணாமல் போகும் அளவிற்கு கறந்து விடும் கறவனைப் போல, கல்லா கட்டி அடுத்த கஸ்டமரைப் பார்க்கச் செல்லும் கடைக்காரரை என்னவென்று நொந்து கொள்வது! அவருக்கு நம் ஆதங்கம் புரியவா போகிறது?

     
விதிக்கப்பட்ட இருபத்தெட்டு நாட்களுக்குள் தீர்க்க முடியாமல் அவதிப்பட்ட நாட்களும் உண்டு. மீண்டும் எப்பொழுது கிடைக்கும் என்று ஏங்கித் தவித்த நாட்களும் உண்டு.

வர வர, காரணம் என்று ஒன்று இல்லாமல் போய் விட்டது. நண்பர்கள் என்றில்லை... 

தெரிந்த முகங்கள், என்றோ ஒரு நாள் எங்கள் கல்லூரி விழாவிற்கு வந்திருந்த அசலூர் கூட்டத்தில் சகஜமாய் சிரித்துப் பேசிவிட்டு காணாமல் போனவன்(ள்)

என்றோ ஒரு நாள் உதவிய உள்ளம், பார்த்து ஏழெட்டு வருடங்களாகி விட்ட பள்ளித் தோழன், அவர்கள் பிறந்த நாள்

ஜெராக்ஸ் கடையில் முப்பது ரூபாய் செலவழிக்க யோசிக்கும் பக்கத்து வீட்டு பார்த்திபனுக்கு +2 ரிசல்ட் வந்து விட்டது

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், உறிக்கும் வெங்காயத்தின் அல்லிசினோடு தன் இயலாமையையும் சேர்த்து முடக்கி, கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த சித்ராவுக்கு வேலை கிடைத்து விட்ட நாளில் குழுவோடு சேர்ந்து கும்மியடித்திட, மறந்து போன இந்த போதையும் உயிர்த்தெழுந்தது.


இன்று யாருக்காக? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில்,

"இதயத்தை ஏதோ ஒன்று
 இழுக்குது கொஞ்சம் இன்று: 
 இதுவரை இதுபோலே நானும் இல்லையே" ... போன் சிணுங்கியது.





 
   "டேய் மச்சான் என்னடா பண்ற...?  WhatsApp வாடா! செம கூத்து நடக்குது"
என்று ஆர்வத்தைப் பெருக்கி விட்டு ஓடி விடும் நண்பேன்டாக்கள் இருக்கும் வரை என் 2G/3G/4G Data போதை எங்கே ஒழியப் போகிறது ?


இப்படி Suspense style-இலேயே எழுதிக் கொண்டிருப்பதும் ஒரு வகை போதை தானோ?

நன்றி: அஸ்வத், தாமரை, சின்மயி, ரஞ்சனி, ரேவதி, ராமச்சந்திரன்

1 comment:

  1. இப்போ எல்லாம் படத்துல இரண்டாவது பாதில பாடல் வந்தா, யாரும் வெளிய போய் சிகரெட் பிடிப்பதில்லை; மொபைல் டேட்டா ஆன் செய்து விட்டு இரு கைகளுக்கிடையில் எதையோ பார்த்து சிரிக்கிறார்கள்...

    ReplyDelete

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...