எட்டாம்
வகுப்பு அரையாண்டுத் தேர்வு. ஜியோகிரஃபி ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம்
இருந்தது. வகுப்பில் பாடம் நடத்தும் போது ஆசிரியர் அழுத்தம் காட்டிய ‘சூயஸ்
கால்வாய்’, ‘பனாமா கால்வாய்’ இரண்டு பத்து மதிப்பெண்களை எதிர்பார்த்து
அமர்ந்திருந்தேன். இந்த ரெண்டு கேள்விய வெச்சு எப்படியாவது ஆறு பக்கம் நிரப்பிட்டா
17 எடுத்தரலாம். மேப்-ல 10. அப்புறம் சூஸ் தி பெஸ்ட்-ல... சே! இப்போதைக்கு
கால்வாய் தான் முக்கியம் – திரும்பத் திரும்ப நீளம், அகலம், ஆழம் என காதைப்
பொத்தி, கண்ணை மூடி நினைவுகூர்ந்து கொண்டே இருந்தேன். சரிபார்க்க கண்களைத் திறந்த
நொடியில்: தேர்வறையில் எனக்குப் பின்னிருக்கையில் அமரும் பிரவீன் என்னை
குறுகுறுக்கப் பார்த்தான்.
‘என்னடா
ரெண்டும் மூணாவது பாடம் கேள்வியாவே படிச்சு வெச்சிருக்கே! ரெண்டுல எதாவது ஒண்ணு
தான்டா வரும். இல்ல வராமலே போகலாம். இன்னொண்ணு ஏழாவது பாடம் காடுல ஒண்ணாவது
படிச்சிருக்கியா இல்லையா?’
‘ஐயோ!
இல்ல டா...’
‘சரி,
புதுசா படிச்சு கொழப்பிக்காம இதையே படி’
‘போச்சு,
எல்லாம் போச்சு ! இது ரெண்டுமே வராம போய்ட்டா என்ன பண்றது? பத்து மார்க் கேள்விய
நம்பித் தான்டா இருக்கேன். 2 மார்க்கும், 1 மார்க்கும் அப்போ கைக்கு வர்றது தான்.
இதுவும் இல்லைனா பேரன்ட்ஸ் மீட்டிங்க்ல இந்த தடவையும் தொலைச்சு எடுத்துருவாங்க! எதுக்கும்
கண்டிப்பா வர்ற மாதிரி ஒரு கேள்வி சொல்லுடா... லைட்டா பாத்து வெச்சுக்கிறேன்’
‘சரி
அமேசான் பத்தி பாத்துக்கோ. நான் அத மட்டும் தான் நம்பியிருக்கேன்’
பிரவீன்
என்ன படித்தாலும் என்னை விட கம்மி மார்க் எடுப்பவன். அவன் பேச்சை நம்புறதா? இல்லை,
இல்லை. அவன் ஹாஸ்டல்ல நைட் ஸ்டடி பண்றப்போ, பக்கத்து கிளாஸ்க்கு ஜியோகிரஃபி
எடுக்குற தண்டபாணி சார் ஏதாவது இம்பார்டண்ட் கொஸ்டீன் சொல்லியிருப்பார். இல்லைனா,
பிரவீன் அமேசான மட்டும் நம்பி இன்னிக்கு வந்திருக்க மாட்டான். பக்கங்கள் அமேசான்
காட்டை நோக்கி படபடத்துக் கொண்டிருந்தன.
ஒவ்வொரு
சூழலிலும், ‘தனக்கு வரப்போகும்
சோதனை என்ன’, என்பதை யூகித்து
யூகித்து தப்பித் தவறி, கரை
ஏறியவர்களில் ஒருவன் நான். இந்த அறிவு வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயரப் போதுமானதா?
நமக்கு
முன்பு உயர்ந்தவர்கள் எல்லோரும் இப்படித்தான் முன்னேறினார்களா?
நாம்
தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறோமோ ? எல்லாம்
தெரிந்து வைத்திருந்தால் மட்டும் தான் ஜெயிக்க முடியுமா ? பள்ளிக்
காலத் தேர்விற்கு முந்தைய நாள் இப்படியான கேள்விகளில் மனம் அலைபாய்ந்தது உண்டு.

கல்லூரியில்,
செய்முறைத் தேர்வுகளில் வைவா-வோஸ் என்று தனியாக 5
மதிப்பெண் ஒதுக்குவார்கள்.
முதலில் உள்ளே செல்பவர் தான் பலியாடு. வெளியே வந்தவுடன், ‘என்ன கேட்டாங்க ? என்ன
கேட்டாங்க’ என்று ஒரு புடை சூழும் பாருங்கள்..! இந்த கதி வேலைக்கான நேர்முகத்
தேர்வுகளிலும் தொடர்ந்தது என்பது தனி வேடிக்கை.
‘பழைய
கேள்வித் தாள்கள்’ என்ற விஷயம் இல்லாவிட்டால் நம்மில் கல்லூரியில் அரியர் வைத்த
பலர், பட்டம் பெறுவதற்குள் ரிடையர் ஆகி இருப்போம்.
திருவள்ளுவரே
இதைத் தான் அறிவுடைமை-னு சொல்லியிருக்கார்: (இன்னும் ஒன்பது விஷயம்
சொல்லியிருந்தாலும்,,,)
எதிரதாக்
காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர
வருவதோர் நோய். (குறள் 429 – அறிவுடைமை)
நான்
படிப்பில் ஒரு சராசரி. ஒவ்வொரு நிலையிலும், ஏதேனும் ஒரு காரணத்தால், ஒரு பாடத்தில்
மட்டும் கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். போதுமான தருணங்களில், இந்த ‘காரண’ங்கள்
அப்பாடம் கையாளும் ஆசிரியர்களின் கணிவு / பாடத்தில் அவர்க்கு (எனக்கு அல்ல, அவருக்கு!) இருக்கும் ஈடுபாடு / மாணவர் (என்) மீதான அக்கறை / எளிமையாக புரிய
வைக்கும் திறன் போன்ற ஏதேனும் ஒன்றாக இருந்திருக்கின்றது. எப்பொழுதும்
ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகியவை மட்டும் ஆர்வத்தைக் கிளறிக் கொண்டே இருந்தன. இந்தப்
பாடங்களிலும் நீங்கள் எதிர்பார்ப்பது போல நூற்றுக்கு நூறு எல்லாம் வாங்கியதில்லை.

பத்தாம்
வகுப்பில் அந்தப் பாடம் – கணிதமாக இருந்தது. ஆசிரியருக்கு என் மீது அசாதாரண
நம்பிக்கை: நான் செண்டம் எடுத்து, வருடா வருடம் எங்கள் பள்ளி பரிசளித்து கௌரவிக்கும்
ஒரு கிராம் தங்க நாணயத்தை அவர்க்கு வாங்கிக் கொடுப்பேன் என்று. கணித ஆசிரியர்
ஒவ்வொரு பருவத் தேர்வின் போதும் எச்சரித்து வந்தார், “கொஞ்சம் கவனக் குறைவுகளைத்
தவிர்த்துக் கொண்டால் கண்டிப்பாக செண்டம் எடுக்க வாய்ப்பிருக்கு. தவற விட்டு
விடாதே. நினைவில் கொள் - 99
இஸ் நெவர் ஈக்வல் டூ செண்டம்!”
ரிசல்ட்
அன்று நான் வாங்கிய மதிப்பெண்களை ஆசிரியர்களிடம் காட்டி, பெருமை கொள்ள,
பள்ளிக்குச் சென்றேன். அங்கே நூற்றுக்கு நூறு வாங்கிய ரம்யா-வைப் பாராட்டிக்
கொண்டிருந்தார் கணித ஆசிரியர். சரி, நம்மையும் ‘வெல் ட்ரைட்’ ஆவது சொல்வார் என
அருகில் நெருங்கினேன். வாங்கிப் பார்த்து விட்டு எரிச்சல் முகத்துடன் “எத்தனை முறை
படிச்சு படிச்சு சொன்னேன் - 99
இஸ் நெவர் ஈக்வல் டூ செண்டம் னு. இப்போ பார் ரெண்டு பேப்பர்-ல ஒண்ணுல கூட செண்டம்
இல்ல. பேப்பர் ஒன்-ல 99,
பேப்பர் டூ-ல 98. மியர் வேஸ்ட்
ஆஃப் டைம் டீச்சிங் யூ”. என்னை மேலும் சிதைப்பதற்குள், இன்னொரு 199 வந்து விட்டான் என்னைக் காப்பாற்ற.
“எந்த
கல்விக்கூடத்தாலும் எதைப் படிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க முடியாது.
எப்படிப் படிக்க வேண்டும் என்று மட்டும் தான் கற்றுக் கொடுக்க முடியும்.”
– சுகி சிவம்
