Monday, 3 February 2014

சில்லறை பயணங்கள்

மதியம்: உச்சி வெயில் – அலைச்சல் – அசதி

பேருந்தைக் கண்டவுடன் அடித்து பிடித்து ஏறி ஜன்னல் சீட்டில் உட்கார்ந்தாயிற்று. நாவைத் தூண்டும் பல தின்பண்டங்கள் வந்து போன வண்ணம் இருந்தன. தாகம் தொண்டையை வருடிக் கொண்டிருந்தாலும், வலம் வந்த வெள்ளரியும் அன்னாசியும் வாங்கத் தோன்றவில்லை.


மூன்று வருடங்களுக்கு முன்பு ஐம்பது ரூபாயில் ஊருக்கு சென்று விட்டு திரும்பி விடலாம். இன்று போவதற்கே அறுபது வேண்டும். காலம் தாள்களின் தேவையை பெருக்கி விட்டது. தோள் பையில் ஒட்டிக் கிடந்த காலி பாட்டிலை நொந்த படி, உள்ளிருந்த சுஜாதாவை வெளிக் கடத்தினேன். போன முறை விட்ட பக்கத்தில் ஒட்டாமல் மனம் அடம் பிடித்தது. என்னை சுற்றி என்ன தான் நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

அவர் கொஞ்சம் படித்தவர் போல் தெரிந்தார். கை நிறைய கலர் கலர் சீட்டுகள். மூன்று நான்கு முறை அதுக்கும் இதுக்கும் நடந்து கொண்டே இருந்தார். இன்றைய பொழுதுக்குள் சீட்டுகளை எல்லோர் கையிலும் திணித்து விட்டு எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என்ற கவலை போல் தெரிந்தது. எரிச்சல் முழுவதையும் நடையிலும் பேச்சிலும் காட்டித் திரிந்தார். நான் மேற்கொள்ளும் பயணம் முழுக்க இவரது குரலை கேட்டுக் கொண்டே இருக்கப் போகிறேன். வேறு யாராக இருக்க முடியும் ? கண்டக்டர் எனப்படும் நடத்துனர் தான்.

அன்றாடம் பயணம் செய்யும் பேருந்துகளில் நடத்துனர்களை கவனித்தால், இரண்டு மூன்று ரகங்கள் தென்படும்.
1 : பக்கத்து தெருவிற்கே கேட்கும் அளவிற்கு கத்திக் கொண்டு அதுக்கும் இதுக்கும் ஓயாமல் நடந்து கொண்டே இருப்பார். சென்டிமீட்டர் அளவு கூட இடமில்லாமல் பயணிகளை நிரப்பிக் கொள்வார். விசில் சத்தம் காதை கிழிக்கும். இது பல தனியார் பேருந்துகளில் உள்ள சில நடத்துனர்களின் போக்கு.


2 : தனக்கென்று கொடுக்கப்பட்ட இருக்கையை விட்டு எழவே மாட்டார். சீட்டையும் காசையும் நிற்கும் மனிதச் சங்கிலி வாயிலாக உரியவருக்கு கொண்டு சேர்ப்பார். நீல நிற உடையோடு ஐந்து (அ) ஆறு மாத கர்ப்பிணி பெண் அளவிற்கு தொப்பையும் கொண்டு சில அரசு பேருந்துகளில் இவரை நீங்கள் காணலாம்.

3 : மேற்கண்ட இரண்டுகளின் இணக்கம்.

மதிய வேளை கொஞ்சம் வித்தியாசமானது. பசியும் கூட சேர்ந்து கொண்டால், நீங்கள் மறைத்து வைக்க விரும்பும் பல கறுப்பு உண்மைகளை கோபமாய் வெளிக்கொணரும். இது தான் தனது கடமை என்பது போல், அதீத அக்கறையாய் பிறரிடம் குற்றம் கண்டுபிடிக்கும் ஆர்வமும் பெருக்கெடுக்கும்.



நிறுத்தத்தில் இருந்து கிளம்பிய பிறகு கை காட்டி நிறுத்தி பேருந்தில் ஏறியவர்களை ‘இவங்களை எல்லாம் ஓடுற பஸ்ஸிலிருந்து தள்ளி விட்டா தேவலை’ என்பது போல் பார்த்தார். இன்னும் ஓட ஓட ஏறுபவர்களைக் கண்டால், “ஏண்டா என் தாலிய அறுக்கறதுக்குன்னே கெளம்பி வர்றீங்க” என்று கத்தினார்.

முதுகில் இரட்டை திமில் போல் புத்தக மூட்டையை சுமந்து வழியை அடைத்துக் கொண்டு, “பாஸ்... பாஸ் ...” என்று சொன்ன பள்ளிச் சிறார்களை எல்லாம் எடுத்துக் காட்ட சொல்லி அவதிப் படுத்தினார்.  

அதிகாலை பயணங்களின் போது இதே காளியப்பன் அண்ணனை சந்தன குங்கும சமேத சாந்த சொரூபியாக பார்த்திருக்கிறேன். இனிக்க இனிக்க பேசுவார். எதுவரைக்கும் சார் என்று புன்முறுவலோடு கேட்டு சீட்டு தருவதோடு மீதம் சில்லறையும் தருவார். இவரது சிரிப்புக்காகவே தினமும் சில்லறைகளை பொறுக்கி எடுத்து வந்த நாட்களும் உண்டு.



இரண்டு இருக்கைகள் தொலைவில், யாரோ ஐந்து ரூபாய் சீட்டுக்கு ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டியதற்காக கரித்து கொட்டி கொண்டிருந்தார். ஒன்பது ரூபாய் டிக்கட்டுக்காக நூறு ரூபாய் தாளை வைத்துக் கொண்டு காத்திருக்கும் எனக்கு அசதியையும் மீறிய ஒரு பதற்றம் ... பழகிப் போன அந்த சிரிப்பை நாளை காலை பார்க்க மாட்டேனோ ?


A Day Without A Smile, Is A Lost Day.

No comments:

Post a Comment

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...