Wednesday, 14 September 2016

உறவுகள் சிறுகதை

உறவுகள் தொடர் சிறு கதை

மணி நள்ளிரவைத் தொட, இன்னும் சில மணித்துளிகள் இருந்தன. ‘நெருங்கிய சொந்தங்கள் போல் பழகிய நட்புகளை விட்டு தொலைவாலும் தொடர்பாலும் நெடுந்தூரம் வந்து விட்டோம்’, என்று அவ்வப்பொழுது நினைவு கூறும் நிமிடங்கள் உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று என்று அமைதியாய் கடக்கத் தான் தோன்றுகிறது. ஆனால், தொலைவைச் சுருக்கும் இந்த அலைபேசி அலறல்கள், மனதை ஆற விடுவதில்லை. அலறல்கள் துவங்கும் முன்பே, அலைபேசியை ஊமைப் படுத்தி விட்டாலும், வலிய வரும் தூக்கத்தை முனக வைக்கும் எண்ணம்: அவள், இன்று அழைப்பாளா?

அவள். சில்வண்டாய் சுற்றித் திரிந்தவள். கூரிய கண்களும், கொஞ்சம் திமிரும், கொஞ்சம் அறிவும், கொஞ்சம் வாயாடித்தனமும், மீச்சிறு அளவு அடக்கமும் சேர்ந்த ஒரு தனித்தன்மையான அழகு படைத்தவள். இருபாலர் பள்ளியில் தான் படித்தாளாம். எங்கள் ஊரிலிருந்து எப்படித் தான் இப்படி ஒருத்தி வந்து சேர்ந்தாளோ, எங்கள் வகுப்பில் ஐக்கியமானாள்.



கல்லூரி நண்பர்கள் கொஞ்சம் குறும்புக்காரர்கள். அவளை வம்புக்கிழுத்து வேடிக்கைப் பார்ப்பதில் ஆனந்தம் கொண்டார்கள். அவளும் சளைக்காமல் ஈடு கொடுத்து வாய் அளப்பாள். சிலர் வழிந்தொழுகினார்கள். ஒருவன் ஏதேதோ அழகெல்லாம் சொல்லி கவிதையாய் காதல் கிறுக்கினான். அதற்கெல்லாம் வசிபவளாகத் தெரியவில்லை.

எனக்கு அவள் தெளிவான சிந்தனை உடைய நல்ல தோழியாகவே தெரிந்தாள். நிறைவேறாத ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்க்க இடம் தேடும் மனதிற்கு ஒரு புகலிடமாய் செவி சாய்த்தாள். கதை சொல்லும் பெரியோருக்கு ஆனந்தம், ‘ம்’ கொட்டும் குழந்தைகளின் ஆழ்ந்த கவனத்தில் இருப்பது போல, எனக்கு அவளது அவதானித்தல் பிடித்திருந்தது. அவ்வப்போழ்து, தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டாலும், வரையறுத்த எல்லை என, ஒரு மெல்லிய கோடு எங்கள் நட்பை பக்குவப்படுத்தியது.


பட்டம் முடித்தவுடன், முதுகலை என்று முதலில் விண்ணப்பித்தவள் அவள் தான். படித்த படிப்பிற்கு, தகுதியான வேலை கிடைத்திருக்கலாம். அவளது குடும்பத்திற்கு வேலைக்கு அனுப்புவதில் ஈடுபாடு இல்லை. காலாகாலத்தில் கால் கட்டு போட்டு ஒரு நல்ல குடும்பத்தில் கரை சேர்த்தி விட்டு விட வேண்டும். இவளுக்கோ, அந்த கட்டை முடிந்த வரையில் தள்ளிப் போட வேண்டும். இன்னும் இரண்டு ஆண்டுகள் மாதம் ஓரிரு வீதமென ‘ம்’ கொட்டின எங்கள் அலைபேசிகள்.

ஒரு நாள் அழைத்தாள். பயம் கலந்த பூரிப்புடன் தனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக அறிவித்தாள். மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பம் பற்றிய அவளது விருப்பங்களைக் கேட்டறிந்து, வாழ்த்துரைத்தேன். முன்பில்லாத தயக்கத்துடனே அழைப்பதும், அவளும் நேரமறிந்து பதிலளிப்பதுமாய் கடந்தன சில வாரங்கள். ஒரு நாள் வாய் விட்டு சொல்லி விட்டாள்: ‘முன்பு போல் உன்னிடம் அடிக்கடி பேச முடியாது. புரிஞ்சுக்கோ’. புரிந்த இடைவெளியில் பயணிக்கும் நட்பிற்கும் இட்டதோர் முற்றுப்புள்ளி.

இன்று, அவள் அழைப்பாளா?


Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...