Sunday, 24 January 2016

போஹா அந்தாதி

போஹா (Poha, पोहा) - வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள், வேர்க்கடலை போட்டு தாளித்த அவல் தான் போஹா. அதி விரைவாக தயாரிக்கக் கூடியது. சூடு ஆறுவதற்கு முன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லாவிட்டால், சுவையற்றுப் போய் வேண்டா வெறுப்புடன் விழுங்க வேண்டி இருக்கும். A bland one.
தினமும் நாவாற வீட்டு சாப்பாடு சாப்பிட்டு பழகிக் கொண்டவனுக்கு, இந்த போஹா முதலில் வெற்றுச் சுவையாகவே இருந்தது. ஆனால், சூடான சுவைக்காகவே, அலுவலக வாகனத்திற்கு காத்திருக்கும் ஐந்து நிமிட வேளையில், தினமும் போஹா சாப்பிடும் பழக்கம் தொற்றிக் கொண்டது.
சிறு வயதில், ஏன் இன்றும் கூட, வீட்டில் இருக்கும் போது மாலை வேளையில், “மதியம் என்ன கொஞ்சூண்டு சோறு தான சாப்பிட்ட! இந்தா ஒரு வாய் இத சாப்பிடு...என்று ஏதாவது தின்னக் கொடுப்பாள் அம்மா. காலை சுட்டு மீந்து போன இட்லியின் உதிரி உப்புமாவாகவோ, மதியம் செய்த கீரை கடைசலாகவோ, வெங்காயம் போட்டுப் பிணைந்த கோதுமை மாவு ரொட்டியாகவோ இருத்தல் பிடித்தம். சில மாலை வேளைகளில், பத்து நிமிடம் பாலில் ஊற வைத்த இரு பிடி அவலில், சர்க்கரை சேர்த்து, சிறிது சிறிதாய் நறுக்கிய தேங்காயை மேலாகத் தூவி, ஸ்பூன் போட்டுக் கொடுப்பாள் அம்மா. போக்கேமான் முடித்து, பே-ப்ளேட் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு, அது எவ்வளவு சீக்கிரம் உள்ளே போகிறதென்பதே தெரியாது.
பயணம், வேலை, பயணம், களைப்பு, தூக்கம் என்று ஒரே மாதிரி சுழன்று வந்தது பூனே வாழ்க்கை. இந்த *வருடம் ஏதாவது விநோதமாய் தீர்மானம் எடுத்துக் கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று தோன்றியது. Resolution – தீர்மானம் என்ற பெயரில் புத்தாண்டு அன்று வலைதளங்களில் கீச்சிக் கூச்சல் போட்டு லைக்ஸ்வாங்க அலையும் கூட்டத்தின் நடுவே நாமும் பண்ணிப் பார்த்தால் என்ன என்ற ஊக்கம் கிடைத்ததும் ஒரு காரணமாய் இருக்கலாம்.
*இலக்கு ஒன்றை முடிவு செய்வதற்குள் ஏப்ரல் மாதம் வந்து விட்டது தனி கதை.
திரைப்படம் பார்ப்பதும் வெளியே சாப்பிடுவதும் மட்டுமே எனக்கான பொழுதுபோக்கு என்றாகி விட்ட பிறகு, வேறென்ன சவாலை எனக்கு நானே ஏற்றுக் கொள்வேன்?


52 வாரங்களில் 52 ‘திரைப்படங்கள் பார்க்க வேண்டும். வெகு விநோதமாய்த் தோன்றா விட்டாலும், கொஞ்சம் கடினமானது தான் என்று நாளடைவில் புரிந்து கொண்டேன்.
நான் வாழும் பகுதியில், தனித் திரைகள் கொண்ட அரங்குகள் வழக்கொழிந்து விட்டன. வார விடுப்பு வியாழக்கிழமை என்று ஆன பிறகு, கூட்டமில்லா ‘Mall’-களில் திரைப்படங்கள் பார்க்க வேண்டும். புரியாத மொழி பேசும் மக்களிடையே, இடமாறு தோற்றப்பிழையுடன்  மத்லப்பிக் கொண்டே உழைத்துக்(!) கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கும், நம்புங்கள், கடினமாகத் தான் இருந்தது.
வாராவாரம் ஒன்று என்று வரையறுத்துக் கொள்ளவில்லை. மொத்தக் கணக்கு 52 வர வேண்டும். அவ்வளவு தான். போன வாரம் விட்டுப் போச்சே என்றோ, அடுத்த வாரம் கம்பெனியில் வேலை நெருக்கடியில் விடுப்பே கொடுக்க மாட்டார்கள் என்றோ, Back to back இரண்டு படங்கள் பார்த்த அனுபவங்களும் அடக்கம்.
துணையில்லாமல் எப்படி செல்வது என்று முடங்கிக் கிடைக்கவில்லை.
விடுப்பு அன்றும் அது ஒரு தினசரிக் கடமைப் போல எழுந்து, என்ன படம் பார்க்கலாம் என்று திட்டமிடுவது.
  பார்க்க வேண்டும் என்பது, பார்த்தே தீர வேண்டும் என்று மாறி, அச்சச்சோ இன்று விடுப்பு அன்றும் வேலை செய்யச் சொல்கிறார்களே, கணக்கில் ஒண்ணு போச்சே என்று அலறும் அளவுக்கு இந்தத் தீர்மானம் ஆட்கொண்டு விட்டது.
திரைப்படம் பார்ப்பது ஓர் அனுபவம். எஸ். ராமகிருஷ்ணன் எழுத்தைப் படித்தது போல, இரண்டு நாட்கள் அந்த உணர்விலேயே மூழ்கிப் போகும் அளவிற்குஎல்லாப் படங்களும் அமைந்து விடுவதில்லை. பார்த்த கதைகளையே புது சுவையுடன் தந்தவை, கிராமத்து வாசனை விலக்காமல் கடைந்தெடுத்த காதல் களம், மேலை நாட்டுக் களத்தை அடிப்படையாய்க் கொண்டு நமது வீட்டு மசாலா சேர்த்துப் பரிமாறியவை, நறுக் நறுக்கென்று திருப்புதல்களுடன் இளம் இயக்குனர்களின் படைப்பு... என மாலை உணவு போலவே நான் பார்த்த ஒவ்வொரு திரைப்படமும். இப்படித் திரைப்படம் பார்ப்பதும் ஏதோ தினமும் அலுவலகம் செல்வது போல் ஆகி விட்டது.
 தினசரி வாடிக்கையாளராகி விட்ட கடையில், இன்று போஹா ஆறிப் போயிருந்தது. ஆனால், பழகி விட்ட காரணத்திற்காகவே ஆறிப் போன, சுவையற்ற போஹாவை சாப்பிட்டு விட்டுத் தான் ஏறினேன் அலுவலகப் பேருந்தில்.

## இதுவரை பார்த்திருக்கும் 42இல் நினைவில் நிற்பவை:

ஓ காதல் கண்மணி, Inside Out, தனி ஒருவன்,  In the heart of the sea, The Martian, Point Break, சார்லி (மலையாளம்)

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...