Thursday, 30 April 2015

அரைக்கோலப் புள்ளிகள்

அவள்
பெயர் தேவையில்லை
உங்கள் வகுப்பிலும் இப்படி ஒரு பெண் இருந்திருப்பாள். இருந்தாள் என்று நீங்கள் உணராமலே கூட உங்கள் கல்லூரி வாழ்க்கையை முடித்திருக்கக் கூடும். நண்பர்களுடன் உரையாடலின் போது, யதேச்சையாக அவளைப் பற்றிய பேச்சு வரும் போது அரை மணி நேரமோ, அரை நாளோ அவளது ஞாபகம் மனதைப் பற்றிக் கொண்டு துரத்தும்.

அவள் ஒரு வினோதம். எல்லோருக்கும் நல்லவளாய் தெரிபவள்!! எளிதில் எவருடனும் பேசிப் பழகிட மாட்டாள். ஆனால் அவளுக்கென ஒரு கூட்டம் உண்டு.


வகுப்பின் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு, தனக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல ஒவ்வொரு கேள்விக்கும் முந்திக் கொண்டு, கை தூக்கி பதில் அளிப்பவள் அல்ல அவள். ஆனால் அந்த முந்திரிக் கொட்டைகளுக்கு முன்பே பதில் கண்டுபிடித்து விட்டு அடுத்த கேள்விக்காக அமைதியாய் காத்திருப்பவள். 

என்ன தான் புரொஃபசர் பல புத்தகங்களை ஆராய்ந்து, முட்டி மோதி செமெஸ்டர்-க்கு இத்தனை என்ற வீதம் வகுப்புகள், ஸ்பெஷல் கோச்சிங் வகுப்புகள் எடுத்தாலும்,  தேர்வுக்கு முந்தைய நாள் அவள் சொல்லிக் கொடுத்த பாடத்திற்கு எதுவுமே நிகராகாது. தேர்வுக்கு முந்தைய கடைசி நேரங்களில் அலைபாயும் நம் மனதை சாந்தப் படுத்துபவள். புரியாத சூத்திரங்களைக் கூட மனதில் பசுமரத்தாணியாய் பதியும் படி சொல்லித் தந்தவள். தேர்வு முடிவுகள் பட்டியலில் மூன்றாவதோ, நான்காவதோ வாங்கி விட்டு, ‘தான் முன்னேறி இருக்கிறோமா’ என்று மட்டும் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்பவள்.


எந்த ஒரு வேலையை செய்யும் போதும் அதில் அவளுக்கு இருக்கும் ஆர்வம், ஈடுபாடு, துடிப்பு என்னை பிரம்மிக்க வைக்கும். ஒரு சிறிய ரெகார்ட் வேலை ஆகட்டும், கல்லூரி விழாக்களுக்கு அவள் அணியும் ஆடையாகட்டும், அவள் செய்த வேலை என்று அடையாளப்படுத்தும் வகையில் அதில் ஒரு முழுமை இருக்கும். அவள் பேச்சில் நுட்பமான கவனம், தேர்ந்த நடத்தை, ஆழ்ந்த சிந்தனை எப்பொழுதுமே பொதிந்திருக்கும். 


நிறைய பேருடைய ஆசைகளை பேச்சு வாக்கில் கேட்டிருந்தாலும், கல்லூரி சுற்றுலா ஒன்றின் போது, அவள் வெளிப்படுத்திய ஆசை வார்த்தைகள் இன்னும் ஞாபகம் இருக்கின்றன. சராசரி பெண்களுக்கானது போலத் தான் என்றாலும், வாழ்க்கையில் அவளுக்கென்று ஓர் ஆசை இருந்தது. படித்து முடித்து ஒரு வேலையில் சேர வேண்டும். தான் உழைத்தது என்று பெருமிதம் கொள்ள, எங்கள் படிப்பிற்கேற்ற வேலையில் சேர்ந்து தன்னால் முடியும் என்று நிரூபிக்க வேண்டும். தன்னால் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். அந்த அனுபவம் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள், அதன் . . .  என அவள் விவரிக்கும் போது கண்களில் மின்னியது அவளது நம்பிக்கை நட்சத்திரங்கள்.


தன்னை யாருக்கு நிரூபிக்கப் புறப்பட்டாள் என்று தெரியாது. அவளோடான பயணம் நான்கு வருடம். அதன் பிறகு என்ன ஆனாள் என்று தெரியாது.

குருவிகள் கொத்தி விளையாடிக் களித்திருந்த எங்கள் வீட்டு அஞ்சல் பெட்டி, குருவிகள் காணாமல் போனதிலிருந்து,  தனிமைப் பட்டு கண்டு கொள்ள ஆள் இன்றி வெறுமையைக் காதலித்துக் கொண்டிருந்தது. திடீரென ஒரு நாள் அதனை ஆசுவாசப் படுத்துவது போல, ஒரு தபால் வந்தது.

அவளுடைய திருமண அழைப்பிதழ்.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. - குறள்  13 (வான் சிறப்பு)



Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...