பக்க
எண்ணைச் சொன்னால்,
பட
படவென பதில் ஒப்பிக்க –
கற்றுக்
கொடுத்த என் ‘மாணவர்’
மேநிலைப் பள்ளி,
பதறாமல்
புதுமைகளைப் பார்த்து
ரசிக்க கற்றுக்
கொடுக்கவில்லை !
முதல்
நாள் கல்லூரி:
கலர்
கலராய் சுடிதார் பார்த்தவுடன்,
செய்வதறியாது
தன் நிழல் பார்த்தது – தலை.
மனம்
நிமிர மறுக்க,
கள்ள
விழிகள் பார்த்து விட்டன:
கசப்பான
அந்தக் காட்சியை:
கண்ணன்கள்
ஒன்றிரண்டாய்,
கன்னிகள்
நிறைந்த ஒரு வகுப்பு.
சிலந்திவலையில்
அகப்பட்ட விட்டில்பூச்சியாய்,
சிக்கித்
தவித்தேன் சிறகுடைந்து.

கொஞ்சம்
கொஞ்சமாய் வகுப்பு நிரம்ப,
ஆறுதல்
அளித்தது சொற்ப ஆண்கள் எண்ணிக்கை.
கலந்தாய்வில்
பார்த்த கிறுக்கன் முக்கால் சிரிப்புடன் வந்து பக்கம் அமர,
‘எங்கேடா
போய்த் தொலஞ்ச இவ்வளவு நேரம் ?’ என்று முனகிய சத்தம்,
அந்தக்
கேரளியின் கொப்பளிக்கும் சிரிப்பில் முடங்கிப் போனது.
அகர
வரிசையாய் அடையாள எண் அமைய,
மகரத்திலும்
சரி, பகரத்திலும் சரி, பெண்கள்.
ஆய்வுக்
கூடங்களில் தினமும் அரை நாள்:
அனுபவி
என்று கட்டளையிட்டது – அட்டவணை.
முதல் ஆய்வு:
இயற்பியல்.
இயல்பாகப் பேச
சிறிதும் முடியாமல்,
அடக்கி வாசித்தால்
அடங்காமல் போவார்கள் என்று,
அணியின் ஐந்து
பெண்களையும் அதட்டிய அதட்டலில்
மகரம் மதலையாய்க்
கண்ணீர் வடிக்க, அவளுக்கு ஆறுதலாய் –
எனது ஏட்டின் முதல்
பக்கம் – பெயருக்கு பக்கத்தில்
“கொரங்கு” என்று
எழுதி வைத்தாள் பகரப் பேதை.
பெண்மைக்கு முகம்
சேர்க்க,
நான் பார்த்த முகங்களெல்லாம்
ஒத்திகை
பார்க்கின்றன என் மனதில் . . .
யதார்த்தமாய்ப்
பேசினாலும் அளவோடு நிறுத்திக் கொண்டு,
என்றும் புன்னகை
உதிர்த்து நகரும் சில சினேக நிறங்கள்;
கொஞ்சம் பேச – நிறைய யோசித்து,
முள்வேலியிட்டு
தற்காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை சின்னங்கள்;
கொஞ்சமே பேசி நிறைய
யோசிக்க வைத்து,
என்னை வளர்த்த
கார்த்திகைப் பெண்கள்;
“சாப்ட்டியா டா?”
என்பதை தலைநாவில் கொண்டு அக்கறை காட்டி,
சகோதர பந்தம் கட்டும்
சித்திரத் தாரகைகள்;
வலி தாங்காமல் விழும்
தருவாயில் எல்லாம்:
என் மன உளைச்சல் போக்கி,
என் மன உளைச்சல் போக்கி,
நீ வீழ்பவன் அல்ல
என்று நம்பிக்கையூட்டி,
உயரத் தூக்கி
நிறுத்தும் உன்னதத் தமக்கைகள்,
‘என்ன?’ என்றால்
‘என்ன’ மட்டும் பேசும்
எல்லைக் கோடு தாண்டா
சீதைகள்;
வலியப் பேசினாலும்
புன்னகை மட்டுமே பதிலாய் சிந்தி,
கூச்சக் கரையேறும்
சில கிராமத்துக் கிளிஞ்சல்கள்;
வலிந்து பேசி நெருங்க
முயலும் சில கொஞ்சல்கள்;
என எத்தனை உருவாய்
என்னைத் தாக்கினாலும்,
என்னை வீழ்த்தியது
என்னவோ
ஏட்டிக்குப்
போட்டியாய் நின்ற சண்டைக்கோழிகள் தான்.
குழப்பம் தீர்ப்பான்
என்று – குழம்பிய போதெல்லாம்
என்னிடம் புலம்பித்
தீர்த்தாள் ஒருத்தி;
இவனிடம் சொன்னால்
மனதாறும் என
ஊர் வம்பு அளந்தாள்
ஒருத்தி;
Gang சேர்ந்து புரளி
பேசும் கூட்டம் அமைத்தாள் ஒருத்தி;
எழுத்தாய் என்னுள்
நிறைந்தாள் ஒருத்தி;
‘எழுதுபவன்’ என்று தோழியரிடையே
பெருமிதம் கொட்டி,
புலவன் பட்டம்
வாங்கித் தந்தாள் ஒருத்தி;
‘மேடை ஏறு, தைரியமாய்ப் பேசு’ என்று
என்னுள் கிடந்ததை வெளிக் கொணர்ந்தாள் ஒருத்தி;
‘அவன் அழுகிறான் – ஆறுதல் சொல்லு’ என்று
உதவி கோரும் நண்பனின் காதலி;
அவனுக்குப் புரியாது, புரிய வைக்கவும் முடியாது
இனி என்னுடன் பேசாதே என்று முட்டாள் காதலனுக்காக,
என்னை வெட்டி விட்டு விலகிய ஒரு தோழி;
சம பங்கு கேட்டு சண்டையிடும் சபை ஒன்று;
என்ன நடந்தால் நமக்கென்ன – எனும்
Cool buddy குழு ஒன்று;
நான் தோற்றாலும் இவள் தோற்றல் கூடாது என
உதவத் தூண்டிய வெண் பட்டாம்பூச்சி ஒன்று;
நாடக முடிவில் நன்றிகள் குவிய,
இதுவும் கடந்து போகும் என்று
கச்சிதமாய் இடத் துணிந்தேன் ஒரு முற்றுப் புள்ளி.
பெயர் புரியாத புதிராய்ப்
பிரியும் உறவா ?
மீண்டும் எங்காவது சந்திப்போமா
என ஏங்க வைக்கும் உயிரா ?
எங்க போயிறப் போறா,
என்ற தூக்கத்தின் உளறலா ?
எங்கிருந்தாலும் நீ
மன நிறைவாய் இருப்பாய் எனும் நல்லெண்ண நிலவா ?
இன்னும் சில காலம்
இருந்திருக்கக் கூடாதா என்ற சேர்க்கைக் கனவா ?
தகுந்த விடை தெரியா
தேர்வுத்தாளில்,
கேள்வியையே திருப்பி எழுதி
வைத்து விட்டு
கதை எழுதும் ஒரு
கேள்வி:
பெண்மை எனப்படுவது
யாதெனில் . . .

Disclaimer:
இது கவிதையன்று. முழுக்கவும் உண்மையன்று. முழுக்கவும் கற்பனையுமன்று.
இக் கலவை உம்மை காயப் படுத்தினால், மன்னிக்க. நினைவலைகளை மீட்டினால், நல்லதொரு Comment இடுக.