Thursday, 1 May 2014

Pack up

விடுதியை காலி செய்து விட்டு வந்து ஒரு மாதம் ஆகப் போகின்றது. எடுத்து வந்த மூட்டை முடிச்சையெல்லாம் இன்று எடுத்து வைப்பதென்று தினம் புலம்பும் அம்மாவிற்கு வாக்கு கொடுத்தாயிற்று.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விஷயத்திற்காக சோம்பல் பட்டாலும், ஒரு முழு வாழைப்பழச் சோம்பேறியாய் மெருகேறிய(றுவ)து கல்லூரி விடுதியில் தான். விடுதியில், முக்கியமாக கல்லூரி விடுதியில் தங்கி படிக்காதவர்கள் வாழ்க்கையில் ஒரு பெரும்பகுதியை இழக்கிறார்கள். அது ஒரு தனி அனுபவம்.
ஒவ்வொரு அறையும் தான் கேட்ட, பார்த்தவற்றை கதைகளாக எழுத ஆரம்பித்தால், புது வேதங்கள்பிறகக்கக் கூடும். உலகில் உள்ள வாசகர்களெல்லாம் தங்கள் பிள்ளைகளுக்கு எண்களை பெயராக சூட்ட முடியாததால் விடுதி அறைகள் தப்பிப் போயின. 
எத்தனை நெகிழ்வுகள், எத்தனை சண்டைகள், எத்தனை எத்தனை கலாய்ப்புகள், எத்தனை காதல் கதைகள், எத்தனை விதமான மனிதர்களை சந்தித்திருக்கிறது விடுதி அறை ! இன்று கண் முன் நிற்பவை எல்லாம் கடந்து போன காலத்தின் மிச்சங்கள் . . .

நான்கு வருடங்களில்,
தூசில் ஊறிப் போன மெத்தை,
சண்டைக்கு சளைக்காத தலையணை,
வெளியில் எடுத்திராது பெட்டிக்குள் படுத்துறங்கும் ஸ்வெட்டர், டார்ச் லைட்,
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை பாவம் பார்த்து துவைக்கப்படும் காக்கிச் சட்டை,
நான்கு நாட்கள் பாதுகாப்பாய் வைத்திருந்து விட்டு மறந்தே போன நண்பர்களின் பிறந்தநாள் பரிசுகள்,
பெண் சகவாசம் பரிச்சயமான புதிதில் தோழி கட்டிய ராக்கி,
உள்ளங்கால்களை ஓடி ஓடி நொடிய வைத்த கடைசி நேர அசைண்மென்டுகள்  Stick file கள்,
நாளை பரீட்சை, இன்று காணவில்லை: அவசரமாய் எழுத ஜுனியரைப் பிடிக்க முயன்று, முடியாமல் போக, விடிய விடிய புதிதாய் எழுதி முடித்த பின் நண்பனின் கட்டிலுக்கு கீழே, புதையுண்ட பொக்கிஷமாய் இன்று கிடைக்கும் தொலைந்த Record,
ஒட்டி வைத்து பார்த்து ரசிக்க கட்டி எடுத்த Kevin O’ Brien போஸ்டர், (இதை நஸ்ரீயா அல்லது காஜல் அகர்வால் ஆகவோ, தோனி அல்லது ரன்பீர் கபூராக மாற்றிக் கொள்வது உங்கள் விருப்பம்!)
காணாதது கண்டது போல் தியேட்டரில் சுட்டு வந்த 3டி கண்ணாடி,
அடுத்த முத்தமிழ் விழாவில் வாசிக்கப் போறேன்: அதுக்குள்ள கத்துக்கப் போறேன்’, ‘வாழ்க்கையில புதுசா ஏதாவது செய்யணும்டா’, என்று என் நண்பனின் கண்ணிலும் லட்சியம் காட்டி, ஓரிரு வகுப்புகளிலேயே மூலையில் சுருண்டு விட்ட கிடார்,
பாழாய் போன லேப்டாப் தூசு துடைக்கும் Cleaner Solution’,
சதுரங்கப் பலகையில் கல்லுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிய ஒற்றை சிப்பாய்,
அவசரத்திற்கு கைக்கு சிக்காமல் வெறும் காலில் ஷூ அணிய வைத்த ஒற்றை socks ,
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாங்கி பற்ற வைத்து ஊதி எஞ்சிய மெழுகுவர்த்தி,
மீந்து நிற்கும் சிம்போஸியம் போஸ்டர்கள், சொவினியர்கள்,
பரீட்சைக்கு முந்தைய நாள் முனைப்போடு ஜெராக்ஸ் போட்ட பழைய வினாத்தாள்,
இன்னும், இன்னும் . . .
இவற்றில் எதை எதை செய்வது ‘Pack up’ ?
என்று திணறித் தடுமாறி கொண்டு வந்து சேர்ந்தாயிற்று.
Packing செய்த அன்றைய தினம், கண் முன்னே விரிய, ‘என்ன! எப்பயும் போல பகற்கனவா ?’ என்ற அதட்டல் நனவு தட்ட, அசடு வழிவதை மறைத்துக் கொண்டு, எடுத்து வைக்க ஆரம்பித்தேன்.

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...