Friday, 31 January 2014

சிறை தேடும் சிறகுகள்




வாழ்க்கையில் சுயமாக எழுந்து, சொந்தக் காலில் ஊன்றி நிற்கத் துடிப்பவரா நீங்கள்? இந்த வலைப்பூவை மேலும் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டாம்.

படித்து முடித்த இளைஞர்கள் வேலை கிடைக்காவிட்டால், சுய தொழில் ஆரம்பியுங்கள் என்று அறிவுறுத்துவது முட்டாள் தனம் மட்டுமல்ல, கண் மூடித்தனமும் கூட . சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்க, மூல தனமாக  ( ! ) முதலீடும் முதலாளித்துவமும் இருந்து விட்டால் போதாது.

அனுபவம் என்கிற பட்டறிவு வேண்டும்.

இன்றைய தொழில் துறை படிப்புகள் ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கத் தேவையான எல்லா ( ! ) பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் தோல்வி ஏற்பட்டால் அதைத் தாண்டிச் செல்வதற்கும், மீண்டும் முயற்சி செய்து வெற்றி அடைவதற்கும், ‘பட்டால் தான் புரியும்’. சுட்டு விட்டது என்று விலகி விட்டால், தீ அனலாக அச்சுறுத்தும்.


சிலர் , "இன்னொருவருக்குக் கீழே வேலை செய்தால் நம் கெளரவம் என்ன ஆவது !", என்று குறுகிய மனப்பாண்மை கொண்டு சுய தொழிலிலோ, குடும்பத் தொழிலிலோ நாட்டம் காட்டுவதை காண முடிகிறது.



தொழில் நுட்பம் பயின்ற பல இளைஞர்களின் இன்றைய கனவு MBA படிக்க வேண்டும். இன்று MBA படித்தவர்களில், வெறும் 5 சதவிகிதம் பேரே சுய தொழில் தொடங்குவதில் முனைப்பாக இருக்கின்றனர்.  95%  பல்துறை நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களில் வேலைக்கு சேரவே விரும்புகின்றனர்.

எது வந்தாலும் எதிர்கொள்வோம் என்ற துணிச்சலும் முற்போக்கு சிந்தனையும்  தான் ஆன்ட்ரப்ரெனூர் - கான மிக முக்கிய தகுதி. சுய தொழில் முனைதல் பற்றி கேட்டால், இத்தனை வளங்கள் இருக்கின்றன, இத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர் என்று மேற்கோளிட்டு வசனங்களை அடுக்கிச் செல்லும் பேச்சாளர்களே !  யதார்த்தம் என்னவென்று உணருங்கள்.

நமது கைகளுக்கு நாமே விலங்கிட்டுக் கொண்டு, சாவியை இன்னொருவரிடம் கொடுத்து, அவர் கட்டுக்குள் அடங்கி வேலை செய்வது தான் இன்பம் என்று கருதும் ‘என்’ போன்ற பலர் இந்த சமூகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். நாங்கள்  விரும்பும் job security, மாதா மாதம் சம்பளம், அவ்வப்போது அதிஷ்டமாய் வாய்க்கும் வெகுமதி இவற்றிற்கு ஈடாக உங்களால் எதுவும் தர இயலாது.

எண்ணிய முடிதல் வேண்டுமெனில்,
         பண்பட்ட உள்ளம் வேண்டும் ...

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக – “பாட்ஷா” சூப்பர் ஹிட் திரைப்படம் வெளி வந்த சமயம்:
“பெரியவன் ஆனா, நீ என்ன ஆகப் போற ?” என்று கேட்ட மூன்றாம் வகுப்பு (ஏழு வயது இருக்குமா ?) ஆசிரியைக்குக் கூட ‘ஆட்டோ ஓட்டப் போறேன்’ என்று சொன்னதை இப்போது நினைத்தால் . . . 







Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...