Wednesday, 24 December 2014

பெண்மை எனப்படுவது யாதெனில் . . .


 பக்க எண்ணைச் சொன்னால், 
பட படவென பதில் ஒப்பிக்க –
கற்றுக் கொடுத்த என் ‘மாணவர்’  மேநிலைப் பள்ளி,
பதறாமல் புதுமைகளைப் பார்த்து 
ரசிக்க கற்றுக் கொடுக்கவில்லை !
 முதல் நாள் கல்லூரி:
கலர் கலராய் சுடிதார் பார்த்தவுடன்,
செய்வதறியாது தன் நிழல் பார்த்தது – தலை.
மனம் நிமிர மறுக்க, 
கள்ள விழிகள் பார்த்து விட்டன:
கசப்பான அந்தக் காட்சியை:
கண்ணன்கள் ஒன்றிரண்டாய், 
கன்னிகள் நிறைந்த ஒரு வகுப்பு.
சிலந்திவலையில் அகப்பட்ட விட்டில்பூச்சியாய், 
சிக்கித் தவித்தேன் சிறகுடைந்து.

http://theheavensdeclare.net/wp-content/uploads/2011/12/12.18.2011.jpg

கொஞ்சம் கொஞ்சமாய் வகுப்பு நிரம்ப,
ஆறுதல் அளித்தது சொற்ப ஆண்கள் எண்ணிக்கை.
கலந்தாய்வில் பார்த்த கிறுக்கன் முக்கால் சிரிப்புடன் வந்து பக்கம் அமர,
‘எங்கேடா போய்த் தொலஞ்ச இவ்வளவு நேரம் ?’ என்று முனகிய சத்தம்,
அந்தக் கேரளியின் கொப்பளிக்கும் சிரிப்பில் முடங்கிப் போனது.


அகர வரிசையாய் அடையாள எண் அமைய,
மகரத்திலும் சரி, பகரத்திலும் சரி, பெண்கள்.
ஆய்வுக் கூடங்களில் தினமும் அரை நாள்:
அனுபவி என்று கட்டளையிட்டது – அட்டவணை.
 முதல் ஆய்வு: இயற்பியல்.
இயல்பாகப் பேச சிறிதும் முடியாமல்,
அடக்கி வாசித்தால் அடங்காமல் போவார்கள் என்று,
அணியின் ஐந்து பெண்களையும் அதட்டிய அதட்டலில்
மகரம் மதலையாய்க் கண்ணீர் வடிக்க, அவளுக்கு ஆறுதலாய் –
எனது ஏட்டின் முதல் பக்கம் – பெயருக்கு பக்கத்தில்
“கொரங்கு” என்று எழுதி வைத்தாள் பகரப் பேதை.


பெண்மைக்கு முகம் சேர்க்க, 
நான் பார்த்த முகங்களெல்லாம்
ஒத்திகை பார்க்கின்றன என் மனதில் . . .

யதார்த்தமாய்ப் பேசினாலும் அளவோடு நிறுத்திக் கொண்டு,
என்றும் புன்னகை உதிர்த்து நகரும் சில சினேக நிறங்கள்;
கொஞ்சம் பேச – நிறைய யோசித்து,
முள்வேலியிட்டு தற்காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை சின்னங்கள்;
கொஞ்சமே பேசி நிறைய யோசிக்க வைத்து,
என்னை வளர்த்த கார்த்திகைப் பெண்கள்;
“சாப்ட்டியா டா?” என்பதை தலைநாவில் கொண்டு அக்கறை காட்டி,
சகோதர பந்தம் கட்டும் சித்திரத் தாரகைகள்;
வலி தாங்காமல் விழும் தருவாயில் எல்லாம்:
 என் மன உளைச்சல் போக்கி,
நீ வீழ்பவன் அல்ல என்று நம்பிக்கையூட்டி,
உயரத் தூக்கி நிறுத்தும் உன்னதத் தமக்கைகள்,
‘என்ன?’ என்றால் ‘என்ன’ மட்டும் பேசும்
எல்லைக் கோடு தாண்டா சீதைகள்;
வலியப் பேசினாலும் புன்னகை மட்டுமே பதிலாய் சிந்தி,
கூச்சக் கரையேறும் சில கிராமத்துக் கிளிஞ்சல்கள்;
வலிந்து பேசி நெருங்க முயலும் சில கொஞ்சல்கள்;
என எத்தனை உருவாய் என்னைத் தாக்கினாலும்,
என்னை வீழ்த்தியது என்னவோ
ஏட்டிக்குப் போட்டியாய் நின்ற சண்டைக்கோழிகள் தான்.


குழப்பம் தீர்ப்பான் என்று – குழம்பிய போதெல்லாம்
என்னிடம் புலம்பித் தீர்த்தாள் ஒருத்தி;
இவனிடம் சொன்னால் மனதாறும் என
ஊர் வம்பு அளந்தாள் ஒருத்தி;
Gang சேர்ந்து புரளி பேசும் கூட்டம் அமைத்தாள் ஒருத்தி;

எழுத்தாய் என்னுள் நிறைந்தாள் ஒருத்தி;
‘எழுதுபவன்’ என்று தோழியரிடையே பெருமிதம் கொட்டி,
புலவன் பட்டம் வாங்கித் தந்தாள் ஒருத்தி;
‘மேடை ஏறு, தைரியமாய்ப் பேசு’ என்று
என்னுள் கிடந்ததை வெளிக் கொணர்ந்தாள் ஒருத்தி;

‘அவன் அழுகிறான் – ஆறுதல் சொல்லு’ என்று
உதவி கோரும் நண்பனின் காதலி;
அவனுக்குப் புரியாது, புரிய வைக்கவும் முடியாது
இனி என்னுடன் பேசாதே என்று முட்டாள் காதலனுக்காக,
என்னை வெட்டி விட்டு விலகிய ஒரு தோழி;
 சம பங்கு கேட்டு சண்டையிடும் சபை ஒன்று;
என்ன நடந்தால் நமக்கென்ன – எனும்
Cool buddy குழு ஒன்று;
நான் தோற்றாலும் இவள் தோற்றல் கூடாது என
உதவத் தூண்டிய வெண் பட்டாம்பூச்சி ஒன்று;
நாடக முடிவில் நன்றிகள் குவிய,
இதுவும் கடந்து போகும் என்று
கச்சிதமாய் இடத் துணிந்தேன் ஒரு முற்றுப் புள்ளி.

பெயர் புரியாத புதிராய்ப் பிரியும் உறவா ?
மீண்டும் எங்காவது சந்திப்போமா என ஏங்க வைக்கும் உயிரா ?
எங்க போயிறப் போறா, என்ற தூக்கத்தின் உளறலா ?
எங்கிருந்தாலும் நீ மன நிறைவாய் இருப்பாய் எனும் நல்லெண்ண நிலவா ?
இன்னும் சில காலம் இருந்திருக்கக் கூடாதா என்ற சேர்க்கைக் கனவா ?
தகுந்த விடை தெரியா தேர்வுத்தாளில்,
கேள்வியையே திருப்பி எழுதி வைத்து விட்டு
கதை எழுதும் ஒரு கேள்வி:
பெண்மை எனப்படுவது யாதெனில் . . .
http://www.universityexpress.co.in/delhiuniversity/wp-content/uploads/2013/12/tileah.png


Disclaimer:
இது கவிதையன்று. முழுக்கவும் உண்மையன்று. முழுக்கவும் கற்பனையுமன்று. இக் கலவை உம்மை காயப் படுத்தினால், மன்னிக்க. நினைவலைகளை மீட்டினால், நல்லதொரு Comment இடுக.

Sunday, 22 June 2014

வழிகாட்டிகள்

யாருக்கும் தெரியாமல் அந்த டெல்லி கம்பெனியில் வேலைக்கு விண்ணப்பித்தேன். நெட்டிலிருந்து அவரது ஐடியைக் கண்டுபிடித்து, என்னுடைய ரெஸ்யூமை மெயில் செய்தேன். கவர் லெட்டர் படித்தாலே வேலை கொடுத்து விடுவார்கள் என்று அபரிமிதமான நம்பிக்கை.
ஒரு வாரத்தில் ரிப்ளை மெயில் வந்தது.

டியர் மிஸ்டர். ......,
You are requested to kindly come for Interview for the position of Graduate Engineer Trainee in our Marketing Department Office at xxxxxxx on dd/mm/yy at 2.30pm at below address.



எனக்கோ தாங்க முடியாத சந்தோஷம். என் வகுப்பில் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை.
“Graduate” !                 “Engineer” !                  “Trainee” !
நான் படித்த படிப்பிற்கே இன்று தான் அர்த்தம் கிடைத்திருப்பதாக நிம்மதி அடைந்தேன். சாதாரணமாக யாரும் இந்த கம்பெனிக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள். வேலை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்டது. நியாயமாக இஞ்சினீயரிங் படித்தவர் செய்ய வேண்டிய வேலை. கணக்கு போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மூளைக் குடைச்சல். போகட்டும். நமக்கும்காம்பெடீஷன்குறைந்தது. இல்லை இல்லை, காம்பெடீஷனே இல்லாமல் ஒழிந்தது.

இரவு பஸ் பிடித்து, காலையில் அந்த ஊருக்கு சென்று விட்டேன். நண்பன் வீட்டில் தயாராகிக் கொண்டு, இண்டர்வியூவிற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே கிளம்பினேன். அவன் சொன்ன படி, கிளம்பி ஒன்றரை மணி நேரத்தில் அந்த ஏரியாவை அடைந்து விடலாம். அதிக பட்சம் பத்து நிமிஷத்தில் அட்ரெஸ் கண்டுபிடித்தால் கூட, இறுதி நேர பயணத்தில் கலைந்த ஃபார்மல் உடையை அட்ஜஸ்ட் செய்ய, தண்ணீர் குடிக்க, டென்ஷன் குறைக்க, இருபது நிமிடங்கள் இருக்கின்றனதேர்வுகள், வைவா போன்றவற்றுக்கு முன்வேளை சாப்பிட மாட்டேன். நேர்காணல் என்பது மிக முக்கிய தேர்வு என்பதால், அன்று மதியம் சாப்பிடும் எண்ணம் துளியும் இல்லை.



மதிய வெயிலின் உக்கிரம் தாங்காமல் அநாதையான சாலை. வெயில் இல்லாவிட்டாலும் இந்த ஊரில் சாலைகள் ஆள் அரவமற்று தான் இருக்கும். அடுக்கு மாடிக் குடியிருப்புகள், லிஃப்ட், கிரௌண்ட் ஃப்ளோர் பார்க்கிங் என பக்கத்து அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் பெயர் கூட தெரியாதுஅந்த பெட்டிக் கடையில் ஒரு பெண்மணி துணிகளுக்கு இஸ்திரி போட்டுக் கொண்டு இருந்தார். நான் என் பையிலிருந்து பாங்காய் மடித்து வைத்திருந்த Gmail முகப்பிட்ட ஒரு காகித்தை எடுத்து நீட்டினேன்.

அக்கா இந்த அட்ரெஸ் . . .”
ஏன் தம்பி நீ வேற ! இங்கிலீசெல்லாம் படிக்கத் தெரிஞ்சா நான் இன்னாத்துக்கு இப்பிடி பெட்டிக் கடயில
மேலே பேசி அறுக்க விடாமல்சரி க்கா சரி க்கா, தோ படிக்குறேன் சொல்லுங்க. நம்பர் 98ன் கீழ் 52, காமராஜர் அவென்யூ, செகண்ட் ஸ்ட்ரீட், அதாவது அக்கா, ரெண்டாவது தெரு...”

காமராஜர் அவின்யூ ரெண்டாவது தெரு-ன்றது, அதோ அங்கா தெரியுது பாத்தியா அந்த லைட்டு கம்பம், அத தாண்டி அரை கிலோ மீட்டர் வரைக்கும் காமராஜர் அவின்யூ, ரெண்டாவது தெரு தான் ... நீ சொல்ற நெம்பர வெச்சு இன்னானு சொல்றது ? புது நெம்பர் இருக்குது. சில வூட்ல பழைய நெம்பரே மாத்தாம கிடக்கும். நெம்பரே இல்லாத வூடு கூட இருக்குது. யாரு வூடு, அவிங்க வூட்ல இன்னா பண்றாங்கனு ஏதாவது வெவெரம் தெரிஞ்சா சொல்லு. நான் எனிக்கு தெரிஞ்சத சொல்றேன்.”

இல்லக்கா... நான் ஈரோட்டுலேர்ந்து வர்றேன். எனக்கு... இந்த அட்ரெஸ்ஸுல ஒரு மெஷினெல்லாம் செய்யுற கம்பெனி ஆஃபீஸ் இருக்கணும். அங்க எனக்கு... ஒரு இண்டர்வியூ இருக்கு. இன்னும் பத்து நிமிஷத்துல...” மனதுக்குள்: இருபது நிமிடங்கள் ஸ்டாப் வாட்ச் ஓடிக் கொண்டிருந்தது.

 “இங்க அப்பிடி ஏதும் கம்பெனி இருக்குற மாதிரி எனக்கு தெர்லியே தம்பி ! இது ஜனங்க குடியிருக்குற ஏரியா.. இங்க நீ சொல்ற மாரியெல்லாம் கம்பெனி... அதெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறமா இல்ல இருக்கும் ! தோ அங்க போறாரு பாரு பேண்ட்டு சொக்கா போட்ட பெரிய மனுஷன்... அவுராண்ட கேளுசிறிது தூரத்தில் ஒரு வீட்டிலிருந்து அவசரமாய் வெளியே வந்த பெரியவர் ஒருவரைக் கை காட்டி விட்டு தனது துணிகளுக்கு தண்ணீர் தெளிக்கச் சென்று விட்டார்.

அந்தப் பெரியவர் கிளம்புவதற்குள் பிடித்து விடலாம் என்று என் ஃபார்மல் உடை கலையாதவாறு மிதமான வேகத்தில் ஓடினேன். அவரது மனைவியோடு சண்டை போலும். சிடு-சிடுவென்றிருந்தார். என்னைப் பார்த்ததும்என்ன, டிக்ஷனரியா ? மனோரமாவா ? இந்த வீட்டுல யாருக்கும் மூளையே இல்ல... இருந்தா தானே வளர்க்குறதுக்கு ! போ போ ஏதாவது ஒரு காலேஜ் புடிச்சு எம்.பி.. படிச்சுட்டு தெரு தெருவா சுத்த வேண்டியது... வேற வீடு பாரு, போஎன்று கையை உயர்த்திக் காட்டிவிட்டு வெகு வேகமாக நடந்து சென்று விட்டார்.

அந்த சாலையில் உள்ள எல்லா வீட்டின் எண்களையும் பார்த்து விட்டேன். இடப்பக்கம் 45ன் கீழ் 105 என்று ஆரம்பித்து, 87ன் கீழ் 63 வரை வந்து விட்டு ஒரு குறுகிய சந்துக்குள் சென்று முடிந்தது. இவ்வளவு சிறிய சந்துக்குள் கண்டிப்பாக எனது கம்பெனி, மன்னிக்க, நான் வேலை தேடும் கம்பெனி இருக்காது. தவிர, அந்த சந்துக்குள் ஒரே ஒரு அபார்ட்மெண்ட் தான் இருந்தது. எதற்கும் கேட்டு வைப்போம் என்று தூக்கக் கலக்கத்தில் இருந்த செக்யூரிட்டியைக் விசாரித்தேன். தடால் புடால் என்று எழுந்தார். விஷயத்தை சொன்னதும் சலித்துக் கொண்டு அப்படி ஏதும் கம்பெனி எல்லாம் இங்க இல்லீங்க என்று விட்டு மீண்டும் போய் தன் சொப்பன ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டார்.

சரி, ‘அந்தஇருபது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. போய் சேர்ந்தால் போதும் என்றாகி விட்டது. அடுத்தது பெட்டி தேய்க்கும் அக்கா சொன்ன மாதிரி, லைட் கம்பத்துக்கு அப்பால் உள்ள அரை கிலோ மீட்டரையும் அலச வேண்டியது தான்.
லைட்டு கம்பத்தைத் தாண்டி சாலையைக் கடந்ததும், தெரு முக்கில் ஆட்டோக் காரர்கள் இருவர் மாமா மாப்பிள என்று அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர்களும் காமராஜர் அவென்யூ இரண்டாவது தெரு அது தான் என்றும், இப்படி ஒரு கம்பெனியைப் பற்றி கேள்விப்பட்டதில்லை என்றும் மற்றவர்கள் சொன்னதையே சொல்லி கை விரித்தனர்.

பக்கத்தில் ஒரு புத்தகம், சிகரெட், பாக்கு போன்றவை விற்கப்படும் பலசரக்குக் கடையில், மதிய உணவு முடிந்து மாலை நேர வாடிக்கையாளர்களுக்காக கடையை தயார் படுத்திக் கொண்டிருந்தார் கடைக்காரர். கடையைத் தாங்கி நின்ற மூங்கிலில் பற்ற வைக்கப்பட்ட நார்ச் சரடு ஒன்று புகை விசிறிக் கொண்டிருந்தது. அதைக் குனிந்து எடுத்து, தன் உதடுகளுக்கிடையில் இருந்த பஞ்சு வைத்த புகையிலைக்குக் கடன் வாங்கிக் கொண்டிருந்தான் ஓர் இளைஞன். நான் அருகில் சென்றதும், திருட்டு முழி முழித்து விட்டு கடைக்குப் பின்னே ஒதுக்குப்புறமாய் சென்று ஊத ஆரம்பித்தான். கடைக்காரர் மாத இதழ்களுக்கிடையே ஒரு அட்டை வைத்திருந்தார். அந்த அட்டையில், ‘பேருந்து நேரம், அட்ரெஸ் போன்ற தகவல்களுக்கு அருகே உள்ள டீக்கடையை அணுகவும்என்று எழுதப்பட்டிருந்தது. டீக்கடை பூட்டப்பட்டிருந்தது.



பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணிகளிடம்அல்லது ஆட்டோக்காரர்களிடம் விசாரிக்க தன்மானம் இடம் கொடுக்காதவர்கள் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் அழைத்து வழி கேட்பதை பார்த்திருக்கிறேன்வளர்ந்து விட்ட இந்த தன்மானச் சமூகம்கூகுள் மேப்ஜி.பி.எஸ்என்று தனது ஒரு கையில் உலகத்தை அடக்கிசமுதாயத்தை விட்டு விலகிச் செல்லத் துடிக்கின்றது.

முதல் முறையாக என்னிடம் "Smart gadgets" இல்லாததற்காக கோபம் கோபமாக வந்தது. 

விதி விட்ட வழி என்று நடக்க ஆரம்பித்தேன். பையில் தண்ணீர் பாட்டிலும் இல்லை. இன்னொரு முறை Gmail கடித்ததைப் பார்த்தேன். வந்திருக்கும் இடம் சரி, தெருவும் சரியானது தான்; இந்த எண் மட்டும் ஏன் இவ்வளவு தொந்தரவு செய்கிறது.
ஒரு வேளை மெயில் அனுப்பிய ஒரு வார இடைவெளியில் கம்பெனியையே மூடி விட்டார்களோ ? வேடிக்கையல்ல. இந்த நகரில், பல நிறுவனங்கள் தோன்றி இருந்த சுவடில்லாமல் மறைந்து போவது போன்ற கதைகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். ஒரு ப்ராஜெக்ட் கிடைத்தால் கம்பெனி ஆரம்பிப்பார்கள். ஒன்றிரண்டு ப்ராஜெக்டுகளுக்குப் பிறகு, எதுவும் அமையாவிட்டால் மூடுவிழா தான். இவற்றை ஊர்ப் பக்கம் உப்புமா கம்பெனி என்று சொல்வார்கள். (செய்தவுடன் தீர்ந்து விடுமாம்!)

அலைச்சலில் களைப்பு ஏற்பட்டது. நொந்து போய், இரு பக்கமும் பார்த்துக் கொண்டே, கர்ச்சீப்பால் வியர்வையை ஒத்தி எடுத்துக் கொண்டே நடந்தேன். ஆபீசை அடைந்து விட்டால் போதும், வேலையை கண்டிப்பாக அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வீடு திரும்பி விடுவேன் என்ற அசாதாரணமான நம்பிக்கை என்னிடம் இருந்தது. இந்த நம்பிக்கை தான் என்னை நடக்க வைத்துக் கொண்டிருந்தது. இருந்தாலும், தேடலின் போது எல்லோருக்கும் இருக்கும் ‘ஒருவேளை...’ என்ற எண்ணம் எனக்கும் இருந்தது.

கண்ணாடி முகப்புகள் கொண்ட ஒரு பெரிய கட்டிடத்தின் முன் நின்று கொண்டிருந்த செக்யூரிடியிடம் சென்றேன். விரக்தியில், என்னுடைய குரல் கொஞ்சம் வேறுபட்டிருந்தது. “அண்ணா ... இந்த அட்ரெஸ் எங்க இருக்குனு தெரியுமா?” பட்டென்று கேட்டு முடித்து காகிதத்தை அவரிடம் நீட்டினேன்.

“தம்பி! அட்ரெஸ்ஸெல்லாம் இருக்கட்டும். மொதல்ல, பெரியவங்க கிட்ட எப்பிடி பேசணும்னு தெரிஞ்சுக்கோ. நீ பாட்டுக்கு வந்த, நீட்டுற, அதட்டுற ?” இவரிடம் இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா, அவரு மானம் போகும், என் பேர் கெடும். அதனால், ஒதுங்கி விட்டேன். “இந்தா தம்பி... நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு போய்கிட்டிருக்கே! மரியாதைனா என்ன-ன்னாவது தெரியுமா?”
‘டேய் என்ன பேச வைக்காத’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவனாய், “இல்ல சார் நான் பாத்து கண்டுபிடிச்சுக்குறேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி” என்றதில் நன்றியின் அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.



இதுக்கு மேல நம்மலால முடியாது. என் கடிதத்தின் இறுதியில் இருந்த டெல்லி தலைமை அலுவலக லேண்ட்லைன் நம்பரை அழைத்தேன். எனக்கு மெயில் செய்திருந்த ஆகாஷ் பேசினார். என்னால் அட்ரெஸ் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அந்த மார்கெட்டிங் ஆபீஸில் ஏதாவதொரு நம்பர் தரும்படி கேட்டேன். அவர் தானே எனக்கு போன் செய்ய இருந்ததாகவும், என்னை இண்டர்வியூ செய்ய இருந்தவர் ஒரு மீட்டிங்கில் உள்ளதாகவும் கூறினார். என்னை வேறொரு நாள் வர முடியுமா என்றும் கேட்டார்.

நான், 'தகவல் அளித்தமைக்கு நன்றி' கூறிவிட்டு, என்னுடைய வேலை என்னவாக இருக்கும், கொஞ்சம் விளக்கமாக சொல்லும்படி கேட்டேன். தமிழ் நாட்டில் உள்ள கம்பெனிகளுக்கு சென்று, அவர்களது மெஷின்களை மார்கெட்டிங் செய்யும் வேலை என்று கூறினார். கிட்டத்தட்ட டிக்ஷனரி விற்பது போலத் தான். தெருத் தெருவாக அலையாமல், கம்பெனி கம்பெனியாக அலைய வேண்டும். நான் மறுபடியும் மெயிலில் தொடர்பு கொள்வதாக சொல்லி விட்டு, அழைப்பை துண்டித்தேன்.

You are requested to kindly come for Interview for the position of Graduate Engineer Trainee in our Marketing Department Office at xxxxxxx on dd/mm/yy at 2.30pm at below address.

கடிதத்தை எடுத்து சரியாக படித்தேன்.

for the position of Graduate Engineer Trainee in our Marketing Department Office

நான் படித்து, புரிந்து கொண்டது:

Interview in our Marketing Department Office” 
for the position of Graduate Engineer Trainee

Featured post

இதழ்களின் அரவணைப்பில் ...

அவளுக்கு நான் வேண்டும் . மிதமான மாலை ; இதமான காற்று , மெலிதான சாரல் : சிந்திய தேனை சுற்றி மொய்த்திடும் ஈக்களைப் போல ஷேர் ஆட்டோ...