
வாழ்க்கையின் ஒவ்வொரு
நிகழ்வும் நாம் சித்தரிக்கும் சுவடுகள். நமது சுவடுகளில், அறிந்தோ அறியாமலோ நம்மை
சுற்றி ஒரு எல்லைக் கோடு உருவாகி விடுகிறது. மனதிற்குள் ஒரு மதில் சுவர். சில,
நாம் பாதுகாப்பு என்று நினைத்து உருவாக்கிக் கொண்டவை; பல தானாக நம்மை சுற்றிக்
கொண்டவை.
இந்த திரை கர்வம்,
கெளரவம், தன்மானம், தற்காப்பு போன்ற எதுவாகவும் இருக்கலாம். என்ன தான் இந்த திரை
நமது சுயத்தை மறைப்பதற்காக தோன்றி இருந்தாலும், உள்ளுணர்வு முழுப் பூசணி போல்
வெளிப்பட்டு விடும்.

‘நான் டாக்டர் ஆக வேண்டும்’,
‘நான் சிவில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும்’ என்று குறிக்கோள்கள் இருந்தாலும்,
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஈடுபாடு காட்டும் மாணவர்களை நீங்கள் காணலாம்.
அமைதி தான் நாடும் தெய்வம்
என்றாலும், புரியாத மொழியில் சிலைகளுக்கு செய்யும் அர்ச்சனை சிறு ஆறுதல் தரும்.
சோதிடத்தை எள்ளி
நகையாடினாலும், ஒரு புது வீடு வாங்கும் போது வாசல் கிழக்கு முகமாக வேண்டும்.
விட்டுக் கொடுத்து
போனாலும், சண்டையிட்டாவது நமக்கே உரியதாக்கிக் கொண்டிருந்தால் எவ்வளவு நல்லா
இருந்திருக்கும் என்று குற்ற உணர்வு குறுகுறுக்கும்.

நமது குட்டு
வெளிப்பட்டு விட்டால், சுற்றி இருக்கும் நட்புகள் நம்மை ஒதுக்கி விடக் கூடும்.
தனிமையில் தள்ளி விடக் கூடும். இந்த பயத்தினாலேயே திரையை கழற்ற முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறோம்.
தனிமை தான்
ஒருவருக்கு கிடைக்கும் மிகப் பெரிய தண்டனை. கொலை கொள்ளை குற்றவாளிகள் சிறையில்
அடைக்கப்படுவது தனிமை அவர்களை சிந்திக்க வைக்கும், சீர்திருத்தும் என்ற
நோக்கத்தில் தானோ என்னவோ.
Shawshank
Redemption படத்தில் வரும் கதாநாயகன், சிறைக்குள்ளும் தன்னை ஒரு
வங்கி ஊழியனாகவே நினைத்து வாழ்கிறான். வாழ முயற்சிக்கிறான். காவலாளிகள் செய்த பிழை
அவனை தப்பிக்க விட்டது இல்லை. அவனை வங்கி ஊழியன் போல் வேலை செய்ய வைத்தது தான்.
வேலி பயிரின்
இலைகளையும், கிளைகளையும் எல்லையைத் தாண்டாமல் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து
விடக் கூடும். ஆனால் வேர் அதன் தாகம் தணியும் வரை ஆழமாக, அதி வேகமாக வளர்ந்து
கொண்டு தான் இருக்கும்.
சரித்திரத்தில் நாம்
சுயத்தை வெட்ட வெளிச்சமாகவும் பதிவு செய்யலாம். அல்லது நம்மை போலியாகக் காட்டும்
ஒரு சரித்திரம் வரைந்து விடவும் முடியும்: 23
ஆம் புலிகேசி வடிவேலுவை போல்.
சில இடங்களில்
வெளிப்பூச்சிட்ட முகம் தான் மிளிரும்.