அவள் ...
எங்கள் வீட்டிற்கு தீண்டத்தகாதவள்.
சற்று தூரத்தில் அவள் வரும் அறிகுறி தெரிந்தாலே வீட்டின்
கதவு, ஜன்னல், முக்கியமாக
மொட்டை மாடிக் கதவு சாத்தி அடைக்கப்படும். “இருக்கிற வேலை
பத்தாதுனு இந்த சனியன உள்ள வர விட்டா, வீட்ட நாலு தடவ
தொடச்சாலும் பத்தாது” என்று அம்மா புலம்புவது இன்னும் ஞாபகம்
இருக்கிறது. எத்தனையோ முறை பார்த்திருந்தாலும் எப்பொழுது ரசிக்க ஆரம்பித்தேன்
என்று நினைவிற்கு வரவே மாட்டேன் என்கிறது.
பல முறை அவள் வர மாட்டாளா என்று ஏங்கி இருக்கிறேன். ஆனால்
எதிர்பாராத நாளன்று வந்து விட்டால் பல வேலைகளை கெடுத்து விட்டாளே என்று கோபம்
கோபமாக வரும்.
தவிர்க்க முடியாமல் அவள் சில முறை வீட்டிற்குள் நுழைந்து
விடுவது உண்டு. எலிகள் கொறித்த நிலவு கால் தான் அவளின் நுழைவு வாயில். மதிய உணவு
தந்த போதையில் மயங்கிக் கிடக்கும் அப்பாவும் அம்மாவும் பதறி அடித்துக் கொண்டு
எழுந்து விடுவார்கள். வெளியே தள்ள எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு வீட்டைத்
துடைக்க இரண்டு வாளிகள் தண்ணீருடன் ஒரு பழைய கிழிந்த பனியன் துணியையும் எடுத்துக்
கொண்டு வந்து நிற்பாள் அம்மா. துடைத்து முடித்து வீடு காயும் வரை யாரும்
வீட்டிற்குள் நடக்கக் கூடாது. மீறக் கூடாத விதி.
அவளுக்கு முன்னோடியாய் வரும் ஈரக் காற்று ‘மண் வாசனை’ என்று பலர்
சொல்லிக் கேட்டிருக்கிறேன். அந்த போதையில் திக்கு முக்காடிப் போகும் பலரைக் கண்டு
வியந்து போயிருக்கிறேன். எனக்கு அந்த வாசனை பரிச்சயப் பட்டதே இல்லை.
அவளை ரசித்துக் கொண்டாடிய ஒரு நிமிடம் மட்டும் நெஞ்சில் ஒரு
புதையலாய் ... வயது ஏழு இருக்கும். அன்று அவள் வருவது அறிந்தவுடன் ஆயத்தமானேன்.
யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்கு சென்று அவளை ரசித்த படியே பாடி ஆடத்
தொடங்கினேன் சற்று தினங்கள் முன் பார்த்த ‘என் சுவாசக் காற்றே’ படத்திலிருந்து
“ஒரு துளி விழுது
ஒரு துளி விழுது
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ” என்ற வரிகள் குழறுபடியாய் என் வாய்க்குள்.
இன்று அவள் வரவில்லை. ரோட்டின் நடுவே நெடுஞ்சாலை
அமைப்பாளர்கள் குவித்து வைத்திருந்ததில் இருந்து கிளம்பிய புகை, அதிலிருந்து அடைக்கப்பட்ட அலாவுதீன் போல
வெளி வந்த மண் வாசனை . அவள் என்று வருவாள் என் வீட்டிற்கு என்று ஏங்க வைத்து
விட்டது.
காத்திருக்கிறேன் ... நீ வருவாய் என . என் முதல் காதலியே!
மழையே !